» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்துவிட்டது: விரைவில் புதிய அரசு - தலீபான்கள் அறிவிப்பு

திங்கள் 16, ஆகஸ்ட் 2021 11:52:04 AM (IST)

ஆப்கானிஸ்தான் அதிபர் தப்பி ஓடி விட்டதால் போர் முடிவுக்கு வந்து விட்டது என தலீபான்கள் அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக இருந்த அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின் லேடனுக்கு அடைக்கலம் அளித்த குற்றத்துக்காக தலீபான்களுக்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவ படைகளை 2001-ல் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது.

அமெரிக்க படைகளின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் அரசு தலீபான்களிடம் இருந்து நாட்டை முழுமையாக மீட்டது. தலீபான்கள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்கள் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. தலீபான்களை முழுமையாக ஒழித்து கட்ட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்ததால் தனது படைகளை அங்கேயே நிறுத்தி வைத்தது. ஆனால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் அமெரிக்க படைகளால் தலீபான்களை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.

எனவே முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் இந்த போரில் இருந்து விலக அமெரிக்கா முடிவு செய்தது. அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தலீபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்கா ஒரு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது. அதில் ஆப்கானிஸ்தானில் பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளிக்க மாட்டோம் என தலீபான்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை திரும்ப பெற அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

அதன்படி கடந்த ஜூன் மாத பிற்பகுதியில் இருந்து அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. 90 சதவீத அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், இதுவரை பதுங்கியிருந்த தலீபான்கள் பாய தொடங்கிினர்.

அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய சில வாரங்களிலேயே ஆப்கானிஸ்தானின் பல்வேறு முக்கிய நகரங்களையும், அண்டை நாடுகளுடனான எல்லை பகுதிகளையும் தலீபான்கள் கைப்பற்றினர். அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களில் ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்களின் தலைநகரங்களை தலீபான்கள் தங்கள் வசம் ஆக்கினார்.

 நேற்று தலீபான்கள் காபூல் நகருக்குள் நுழைந்தனர். எனினும் படை பலத்தை பயன்படுத்தி காபூலை கைப்பற்ற விரும்பவில்லை என தெரிவித்த தலீபான்கள் அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும் கூறினர்.

அதன்பின்னர் காபூல் நகரம் தங்கள் வசமானதை தொடர்ந்து, வன்முறையை உடனடியாக நிறுத்தும்படி போராளிகளுக்கு தலீபான் அமைப்பு உத்தரவு பிறப்பித்தது. ஆப்கான் ராணுவ வீரர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

விமான நிலையங்கள், மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும் என்றும், அவற்றுக்கான வினியோகம் நிறுத்தப்படாது என்றும் தலீபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்தது‌. அதேபோல் வெளிநாட்டவர்கள் விரும்பினால் காபூலை விட்டு வெளியேறலாம் அல்லது அவர்கள் தொடர்ந்து காபூலில் இருக்க வேண்டுமெனில் தங்களை தலீபான் அதிகாரிகளிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தலீபான்கள் அறிவித்தனர்.

எனினும் காபூலை தலீபான்கள் கைப்பற்றியதால் பீதியடைந்த உள்ளூர் அரசு அதிகாரிகள் அனைவரும் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்காக விமான நிலையங்களில் குவிந்துள்ளனர். அதேபோல் காபூல் நகரை சேர்ந்த பொதுமக்களும் உயிருக்கு பயந்து அண்டை நாடான பாகிஸ்தானை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதனிடையே ஆட்சி மாற்றம் தொடர்பாக தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளுக்கும் இடையே அதிபர் மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகியதாக தகவல் வெளியானது. தலீபான்கள் காபூலை நெருங்கும்போதே அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். மேலும்  துணை அதிபர் அம்ருல்லாவும் காபூலைவிட்டு வெளியேறி விட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், நாட்டை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் அஷ்ரப் கனி தனது பேஸ்புக் பக்கத்தில்போரில் மக்களின் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவே அதிபர் பதவியிலிருந்து விலகினேன். 20 ஆண்டுகளாக நாட்டை பாதுகாக்க என் வாழ்நாளையே அர்ப்பணித்தேன். மக்கள்தான் முக்கியம் என்பதால் பதவியை ராஜினாமா செய்தேன். நாட்டின் செழிப்பு, மரியாதையை காக்க இனி தலீபான்கள்தான் பொறுப்பு” என கூறி உள்ளார்.

இதனிடையே அமெரிக்காவில் ஆப்கானில் இருந்து படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி மாளிகை முன் ஜோ பைடனுக்கு எதிராக மக்கள் கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.  

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகைக்குள் நுழைந்த தலீபான்கள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து தலீபான்கள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். முன்னாள் வெளியுறவு மந்திரி அலி அகமது தலைமையில் 6 மாதங்களுக்கு இடைக்கால அரசை அமைக்க முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

தலீபானின் அரசியல் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது நயீம் கூறும் போது, தனித்தனியாக வாழ விரும்பவில்லை ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தின் அமைப்பது குறித்து விரைவில் தெளிவுபடுத்தப்படும். கடவுளுக்கு நன்றி, நாட்டில் போர் முடிந்துவிட்டது. நாங்கள் தேடியதை நாங்கள் அடைந்து விட்டோம். இது நமது நாட்டின் சுதந்திரம் மற்றும் நமது மக்களின் சுதந்திரம். யாரையும் குறிவைத்து எங்கள் நிலங்களைப் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம், மற்றவர்களுக்கு தீங்கு செய்ய நாங்கள் விரும்பவில்லை என்று அவர் கூறினார். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து விவாதிக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory