» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆஸியில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு: மக்கள் போராட்டம்! போலீசார் மீது கற்கள் வீச்சு

ஞாயிறு 25, ஜூலை 2021 5:18:38 PM (IST)



ஆஸ்திரேலியாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் கடந்த ஆண்டு உலக நாடுகளுக்கு பரவ தொடங்கிய சமயத்தில் வளர்ந்த மற்றும் வலுவான சுகாதார கட்டமைப்பை கொண்ட பல நாடுகளும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறின.அதேவேளையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கரோனா வைரசை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்தன.அதனால் தான் பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. அங்கு இதுவரை 32 ஆயிரத்து 594 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 916 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

எல்லைகளை மூடுதல், பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் கடுமையான ஊரடங்கை அமல் படுத்துதல், சிறப்பான தனிமைப்படுத்தல் திட்டங்கள் போன்றவற்றின் மூலம் கரோனா வைரசின் முதல் அலையை ஆஸ்திரேலியா வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது. ஆனால் தற்போது கரோனா வைரசின் 2-வது அலை அந்த நாட்டை பாடாய்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே அங்கு கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக டெல்டா மாறுபாடு கரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. விக்டோரியா, குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாகாணங்களில் கரோனா வைரஸ் பரவல் அதி தீவிரமாக உள்ளது. அங்கிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு தினசரி பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனிடையே வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் ஸ்காட் மாரிசன் தலைமையிலான அரசு நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது

குறிப்பாக விக்டோரியா, குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய 3 மாகாணங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.‌ இந்தநிலையில் அரசின் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கோபமடைந்த ஆஸ்திரேலியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். சிட்னி, மெல்பேர்ன், பிரிஸ்போர்ன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.சிட்னி நகரில்‌ பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான மக்கள்‌ சாலைகளில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.போராட்டக்காரர்களில் சிலர் ‘‘முக கவசத்தை இறக்கி விட்டு உங்கள் குரலை உயர்த்துங்கள்‘‘ ‘‘ஆஸ்திரேலியாவை தட்டி எழுப்புங்கள்’’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.

இதனிடையே போலீசார் போராட்டத்தை கலைக்க முயன்றபோது போராட்டக்காரர்களுக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி தண்ணீர் பாட்டில்கள், கற்கள் உள்ளிட்டவற்றை வீசி எறிந்தனர்.‌ இதில் போலீஸ் அதிகாரிகள் பலர் படுகாயமடைந்தனர்.‌ அதேபோல் போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்த போது நடந்த தள்ளுமுள்ளில் பலர் காயமடைந்தனர். இதற்கிடையில் இந்தப் போராட்டம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory