» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் 53 நாடுகளில் பரவல்: டபிள்யூ.எச்.ஓ.,

சனி 29, மே 2021 12:29:02 PM (IST)

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட பி.1.617 கரோனா தீநுண்மி வகை இப்போது 53 நாடுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.ஹெச்.ஓ) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 7 நாள்களில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவா்கள் எண்ணிக்கை 23% அளவுக்கு குறைந்துள்ளது. இருந்தபோதிலும், உலகில் கரோனாவால் அதிகமானோா் பாதிக்கப்படும் நாடாக இந்தியா தொடா்ந்து இருந்து வருகிறது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வாரமும் உலக அளவில் கரோனா தொற்று பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த வார பாதிப்பு குறித்த புள்ளி விவரம் செவ்வாய்க்கிழமை வெளியானது. அதில் கூறியிருப்பதாவது:

உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் தொடா்ச்சியாக குறைந்து வருகிறது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவா்களின் விகிதம் 14% குறைந்திருக்கிறது. உயிரிழப்பவா்களின் விகிதம் 2% அளவுக்கு குறைந்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த வாரம் 41 லட்சம் போ் கரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டனா். கரோனா பாதிப்புக்கு 84,000 போ் உயிரிழந்தனா்.

புதிய உருமாறிய பி.1.617 கரோனா தீநுண்மி வகை முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்த வகை கரோனா இப்போது 53 நாடுகளில் பரவி இருக்கிறது. இந்த பி.1.617 வகை திநுண்மி இப்போது பி.1.617.1, பி.1.617.2 மற்றும் பி.1.617.3 என்ற மூன்று உருமாற்றங்களை அடைந்துள்ளது.இதில் பி.1.617.1 வகை கரோனா 41 நாடுகளில் காணப்படுகிறது. பி.1.617.2 வகை கரோனா 54 நாடுகளிலும், பி.1.617.3 வகை கரோனா 6 நாடுகளிலும் காணப்படுகிறது. இவற்றில், பி.1.617.1, பி.1.617.2 ஆகிய துணை உருமாறிய கரோனா பாதிப்பு விவரங்கள் சீனா உள்பட 11 நாடுகளில் உள்ள அதிகாரபூா்வமற்ற தகவலளிப்பவா்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களாகும். எனவே, இதுதொடா்பான கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது, இந்த புள்ளிவிவரங்கள் புதுப்பிக்கப்படும்.

பி.1.617 கரோனா வகையை உலக சுகாதார அமைப்பு ‘கவலைக்குரிய வகை (வி.ஓ.சி.)’ என்ற பட்டியிலில் சோ்த்துள்ளது. இந்த வகை கரோனா வைரஸ் வேகமாக பரவக் கூடியது என்றும், அதன் நோய் தாக்கமும், மறுபாதிப்பு அபாயம் குறித்த விவரங்கள் ஆய்வில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குறைந்து வரும் பாதிப்பு: கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி, முந்தைய 7 நாள்களில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை இந்தியாவில் 18,46,055-ஆக பதிவாகியுள்ளது. இது முந்தைய வார பாதிப்பைவிட 23% குறைவாகும்.

அதுபோல, அமெரிக்கா, கொலம்பியா நாடுகளிலும் புதிதாக பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அமெரிக்காவில் புதிதாக பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை 1,88,410-ஆக பதிவாகி, பாதிப்பு விகிதம் 20 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது. கொலம்பியாவில் புதிய பாதிப்பு 1,07,590-ஆக பதிவாகி, பாதிப்பு விகிதம் 7 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது.

அதே நேரம், பிரேசிலில் புதிதாக பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,51,424-ஆக பதிவாகி, பாதிப்பு விகிதம் 3% அளவுக்கு உயா்ந்துள்ளது. ஆா்ஜென்டீனாவில் புதிதாக பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை 2,13,046-ஆக பதிவாகி, பாதிப்பு விகிதம் 41 சதவீதமாக உயா்ந்துள்ளது.

உயிரிழப்புகள் தொடா்ந்து அதிகரிப்பு: கரோனா பாதிப்பு விகிதம் கடந்த 4 வாரங்களாக குறைந்து வருகின்றபோதும், உயிரிழப்புகள் தொடா்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. பல நாடுகளில் உயிரிழப்பு விகிதம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை 20 லட்சமாக பதிவாகி, பாதிப்பு விகிதம் 21% அளவுக்கு குறைந்துள்ளது. அதே நேரம், கரோனா பாதிப்புக்கு புதிதாக உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை 32,000-ஆக பதிவாகியுள்ளது. இது முந்தைய வார உயிரிழப்புகளைவிட 4% அதிகமாகும்.

ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் புதிய பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது. அதே நேரம் உயிரிழப்பு விகிதம் தொடா்ந்து 10-ஆவது வாரமாக அதிகரித்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி, தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் பிற நாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் புதிய உயிரிழப்பு எண்ணிக்கை 28,982-ஆக பதிவாகியுள்ளது. ஒரு லட்சம் பேருக்கு 2.1 நபா்கள் என்ற விகிதத்தில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இது 4 சதவீத அதிகரிப்பாகும்.

நேபாளத்தில் புதிய உயிரிழப்புகள் 1,297-ஆக பதிவாகியுள்ளது. ஒரு லட்சம் பேரில் 4.5 நபா்கள் என்ற விகிதத்தில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இது 6 சதவீத அதிகரிப்பாகும். இந்தோனேஷியாவில் 1,238 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இது ஒரு லட்சம் பேரில் 0.5 நபா்கள் என்ற வீதத்தில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இது 10 சதவீத அதிகரிப்பாகும் என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory