» செய்திகள் - விளையாட்டு » உலகம்

செவ்வாய் கிரகத்தில் சீனாவின் விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

வியாழன் 20, மே 2021 11:25:47 AM (IST)



செவ்வாய் கிரகத்தில் தியான்வென்-1 விண்கலம்  எடுத்த புகைப்படங்களை சீன விண்வெளி மையம் இன்று வெளியிட்டுள்ளது. 

உலக அளவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் வல்லரசு நாடுகள், விண்வெளியிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட நீண்ட காலமாகவே முயற்சித்து வருகின்றன. ஆரம்ப காலத்தில் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நாடுகளின் கவனம் பின்னர் செவ்வாய் கிரகத்தின் பக்கம் திரும்பியது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்காக பல கோடிகளை செலவிட்டு குறிப்பிடத்தக்க சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளன. 

சந்திரயான் விண்கலத்தின் மூலம் நிலவில் நீர் இருந்ததற்கான ஆதாரத்தை இந்தியா கண்டறிந்தது, விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 விண்கலமானது, கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 6 சக்கரங்களைக் கொண்ட ‘ரோவர்’ கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும். இதற்கிடையில் சீனா அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம் கடந்த 15-ம் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. 

செவ்வாய் கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது.  மேலும் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐந்து கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் கேமராக்கள் இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், தியான்வென் 1 ரோவர் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் செவ்வாய் கிரகத்தில் எடுத்துள்ள புகைப்படங்களை சீன விண்வெளி மையம் இன்று வெளியிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory