» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜார்க்கண்ட் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: ஹேமந்த் சோரன் அரசு வெற்றி!

திங்கள் 8, ஜூலை 2024 5:53:43 PM (IST)ஜார்க்கண்ட் சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. 

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் அம்மாநில முதல் அமைச்சராக பதவி வகித்து வந்தநிலையில், அவர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் கடந்த ஜனவரி 31-ம்தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

முன்னதாக அவர் தனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் முதல்-அமைச்சரானார். சுமார் 5 மாதங்கள் சிறையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு ஜூன் 28-ம்தேதி ஜார்கண்ட் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதனால் அவர் சிறையில் இருந்து விடுதலையானார். இது கட்சியினருக்கும், கூட்டணி தலைவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் முதல்-அமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் சி பி ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். பின்னர் ஹேமந்த் சோரன், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனைத்தொடர்ந்து ஜார்கண்ட் முதல்-அமைச்சராக ஹேமந்த் சோரன் கடந்த 4-ந் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றுள்ளது. 81 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக 45 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். ஹேமந்த் சோரன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் ஜே.எம்.எம். கட்சிக்கு 27 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு 17 எம்.எல்.ஏ.க்கள், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 1 எம்.எல்.ஏ., பா.ஜனதாவுக்கு 24 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory