» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழகத்தை சேர்ந்த திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் தமிழில் பதவியேற்பு!
செவ்வாய் 25, ஜூன் 2024 4:28:29 PM (IST)
18-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் வரிசையாக இன்று பிற்பகல் பதவியேற்றனர்.
18-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நேற்று முதல் பதவியேற்று வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் வரிசையாக இன்று பிற்பகல் பதவியேற்றனர். அப்போது, அரசியல் சாசனத்தை கையில் ஏந்தியபடி தமிழில் பதவியேற்ற மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதா, இறுதியில் தமிழ்க் கடவுள் முருகன் மீது ஆணையாக உறுதி கூறுவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ் மக்கள் வாழ்க, இந்தியாவின் நம்பிக்கைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்க என்று முழக்கமிட்டு பதவியேற்றுக் கொண்டார். மேலும், தமிழகத்தை சேர்ந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எம்பிக்களும் அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி தமிழில் எம்பியாக பதவியேற்றுக் கொண்டனர்.
மக்களவை உறுப்பினராக பதவியேற்கும் போது தலித், பழங்குடியினர் மீதான தாக்குதலை நிறுத்துக என்று தமிழக காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் முழக்கமிட்டார். இதனைக் கேட்ட பாஜக எம்பிக்கள் குரல் எழுப்பிய நிலையில், இந்தியா கூட்டணி எம்பிக்கள் எதிர் குரல் எழுப்பியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.