» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆர்எஸ்எஸ் தலைவரை புகழ்ந்த இமாம் தலைவருக்கு கொலை மிரட்டல்: வெளிநாட்டின் சதி?

செவ்வாய் 4, அக்டோபர் 2022 10:59:31 AM (IST)

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை, தேசத்தந்தை எனப் புகழ்ந்த, அகில இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாஸிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவராக டாக்டர் உமர் அகமது இலியாஸி உள்ளார். இவர் டெல்லி கஸ்தூரிபாய் காந்தி மார்கில் மசூதியுடன் இணைந்து அகில இந்திய இமாம்கள் அமைப்பின் அலுவலகத்தில் வசித்து வருகிறார். இங்கு கடந்த செப்டம்பர் 22-ம் தேதி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தனது சக நிர்வாகிகளுடன் வந்திருந்தார். அங்கிருந்த உமர் அகமது இலியாஸி அவர்களை வரவேற்று சுமார் ஒரு மணி நேரம் பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு ஆர்எஸ்எஸ் தலைவர் பாகவத் அருகிலுள்ள மதரசாவுக்கும் சென்று அங்கிருந்த மாணவர்களிடம் பேசினார். இதனால், மோகன் பாகவத்தை, தேசத்தந்தை எனவும் தேசத்தின் ரிஷி என்றும் இமாம் இலியாஸி புகழ்ந்திருந்தார். இதையடுத்து அன்று மாலை முதல் தனக்கு கொலை மிரட்டல் வரத் தொடங்கியதாக டெல்லி காவல் துறையிடம் இமாம் இலியாஸி புகார் செய்துள்ளார். 

இப்புகார் மீது டெல்லியின் திலக் மார்க் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது.உமர் அகமது இலியாஸி தனது புகாரில், "ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்த நாள் முதல், எனது தலையை துண்டிக்க இருப்பதாக எனக்கு பலரும் மிரட்டல் விடுக்கின்றனர். முதல் மிரட்டல் கொல்கத்தாவில் இருந்து வாட்ஸ் அப் எண்ணில் வந்தது. இதேவகையில், பாகிஸ்தான், சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் லண்டனில் இருந்தும் மிரட்டல்கள் வருகின்றன. சிலர் தங்கள் வீடு, அலுவலக தொலைபேசி மூலமாகவும் மிரட்டுகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்புகார் மீது விசாரணை நடத்தி வரும் திலக் மார்க் காவல் துறையினருக்கு, கொலை மிரட்டலின் பின்னணியில் வெளிநாட்டின் சதி இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு விரைவில் டெல்லியின் சிறப்பு போலீஸ் பிரிவுக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இமாம்களின் தலைவரான உமர் இலியாஸியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பை பலப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory