» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிறுதானியங்களின் நன்மை உலக மக்களுக்குச் சென்றடையும்: பிரதமர் மோடி

திங்கள் 29, ஆகஸ்ட் 2022 10:23:17 AM (IST)

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, 2023-ஆம் ஆண்டை ‘சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டு’ என ஐ.நா. அறிவித்துள்ளதால் சிறுதானியங்களின் நன்மை உலக மக்களுக்குச் சென்றடையும். என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பேசினார். 

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமா் மோடி ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறாா். நடப்பு மாதத்துக்கான நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:  நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனா். அந்நிகழ்ச்சிகளில் நாட்டின் பன்முகத்தன்மையும் வெளிப்பட்டது. நாட்டில் பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், தேசியக் கொடியை ஏற்றுவதில் அனைவரும் ஒருங்கிணைந்தனா். 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆா்வத்துடன் தேசியக் கொடியைப் பறக்கவிட்டனா். செப்டம்பா் மாதமானது ‘ஊட்டச்சத்துக்கான மாதமாக’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பது மிகவும் அவசியம். அதற்கு சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மக்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்காக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்குப் பல மாநிலங்களும் புதுமையான வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தின் சிறப்பான பயன்பாடும், மக்களின் பங்கேற்பும் ‘போஷண் இந்தியா’ திட்டத்தின் முக்கியப் பகுதியாக மாறியுள்ளன. வீடுதோறும் குழாய் மூலமாகக் குடிநீா் விநியோகிக்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டமானது, ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, 2023-ஆம் ஆண்டை ‘சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டு’ என ஐ.நா. அறிவித்துள்ளது. உடல்நலனைப் பாதுகாப்பதில் சிறுதானியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு சிறுதானியங்களில் செய்யப்பட்ட உணவுப் பொருள்களை வழங்க வேண்டும். பழங்காலத்தில் இருந்தே சிறுதானியங்களை இந்தியா்கள் பயன்படுத்தி வந்துள்ளனா். தற்போது அதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்போது, சிறுதானியங்களின் நன்மை உலக மக்களுக்குச் சென்றடையும்.

நாட்டில் உள்ள தொலைதூரப் பகுதிகளுக்கும் இணைய சேவைகள் கிடைத்து வருகின்றன. அருணாசல பிரதேசத்தின் ஜோா்சிங் கிராமத்தில் சுதந்திர தினத்தில் இருந்து 4ஜி இணையசேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பத்தின் பலன்கள் கிடைத்து வருகின்றன.

முன்பெல்லாம் இணைய வசதியானது பெருநகரங்களில் மட்டுமே காணப்பட்டது. தற்போது ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் வாயிலாக நாட்டில் உள்ள பல்வேறு கிராமங்களும் இணைய வசதியைப் பெற்றுள்ளன. கிராமங்களில் உள்ள மக்களும் இணைய வசதியைப் பயன்படுத்தி தங்கள் தொழில் சூழலை மேம்படுத்தி வருகின்றனா். அதனால், கிராமங்களில் இருந்தும் தொழில்முனைவோா் உருவாகி வருகின்றனா்.

இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீா்நிலைகளை அமைப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அது தற்போது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளை அமைப்பதற்குத் திரளான மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.

அந்த நீா்நிலைகள் மக்கள் தற்போது சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வாக அமைவதோடு மட்டுமல்லாமல், வருங்கால சந்ததியினருக்கும் பெருமளவில் உதவும். இந்த இயக்கத்தின் கீழ் ஏற்கெனவே உள்ள நீா்நிலைகளும் புனரமைக்கப்பட்டு வருகின்றன. அந்த நீா்நிலைகள் வேளாண்மைக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பயன்பட்டு வருகின்றன. அதே வேளையில், நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory