» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

புதன் 3, ஆகஸ்ட் 2022 10:16:53 AM (IST)

உலகில் உள்ள வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது என மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் நேற்று விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட் உறுப்பினர் கரீம் பேசும்போது, "கடந்த 8 ஆண்டு மோடி அரசில், அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்தும், சிறந்த விலை கிடைக்க விவசாயிகள் போராடுகின்றனர். விலைவாசி உயர்வால் நுகர்வோர் சிரமப்படுகின்றனர். கூடுதலாக இருப்பு உள்ள உணவு தானியங்களை ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரசு அளிக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதில் அளித்து பாஜக உறுப்பினர் பிரகாஷ் ஜவடேகர் பேசும்போது, "விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பணவீக்கம் தற்போது 7 சதவீதமாக உள்ளது.

ஐ.மு.கூட்டணி அரசில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தை தொட்டது. கரோனா தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது” என்றார். இதுபோல மேலும் சில எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினர்.

பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவாதத்துக்கு பதில் அளித்து பேசியதாவது: இந்திய ரூபாயின் மதிப்பை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணிக்கிறது. மாற்றம் ஏற்பட்டால் மட்டும் அதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தலையிடுகிறது. மற்ற நாடுகளைப் போல், இந்தியாவில் ரூபாயின் மதிப்பு மிக மோசமாக வீழ்ச்சியடையவில்லை. இதை உறுப்பினர்கள் புரிந்துகொண்டு இந்திய ரூபாயின் மதிப்பு பற்றி பேச வேண்டும். ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியும், நிதியமைச்சகமும் ஈடுபட்டுள்ளது.

பணவீக்கம் சற்று அதிகமாக உள்ளது என்பதை ஏற்கிறோம். ஆனால் அதைக் கட்டுப்படுத்த இலக்குடன் கூடிய அணுகுமுறையை மத்திய அரசு பின்பற்றுகிறது. தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு விலைகளை அரசு கட்டுப்படுத்தியுள்ளது. அச்சகத்திலிருந்து வங்கிகள் வாங்கும் காசோலை புத்தங்களுக்குத்தான் ஜிஎஸ்டி வரி. வாடிக்கையாளர்களின் காசோலைகளுக்கு வரி இல்லை.

மருத்துவமனை படுக்கைகள், ஐசியு அறைகளுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை. நாள் ஒன்றுக்கு ரூ.5,000 வாடகை உள்ள அறைகளுக்குத்தான் வரி. தானியங்கள், பருப்பு வகைகள், தயிர், லஸ்ஸி, மோர் போன்ற உணவுப்பொருட்களுக்கு ஒவ்வொரு மாநிலமும் வரி விதிக்கின்றன. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

JAI HINDAug 3, 2022 - 04:05:40 PM | Posted IP 162.1*****

YES WE BELIEVE BJP

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory