» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சீனர்களிடம் ரூ.50லட்சம் லஞ்சம் : கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை!

செவ்வாய் 17, மே 2022 11:40:46 AM (IST)

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது. கார்த்தி சிதம்பரம் தற்போது டெல்லியில் இருப்பதாகத் தெரிகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "எத்தனை முறை என்று எனக்கு சரியாக நினைவில்லை. ஆனால் நிச்சயமாக சாதனை எண்ணிக்கைதான்" என்று பதிவிட்டுள்ளார்.

ஏர்செல் மேசிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்குகளில் சிபிஐ, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பலமுறை சோதனை நடத்திய நிலையில் தற்போது வெளிநாட்டவர் சிலருக்கு சட்டவிரோதமாக விசா பெற்றுத்தந்ததாக வழக்கு தொடரப்பட்டு சோதனை நடந்து வருகிறது. அதுவும் குறிப்பாக 250 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாகவும். அதற்காக ரூ.50 லட்சம் வரை கார்த்தி சிதம்பரம் கையூட்டு பெற்றதாகவும் சிபிஐ குற்றஞ்சாட்டுகிறது. பஞ்சாபில் நடைபெறும் மின் திட்டம் ஒன்றில் பணியாற்றும் பொருட்டு அந்த 250 பேருக்கும் விசா பெற்றுக் கொடுத்ததாகத் தெரிகிறது.

அதேபோல், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்லாத வகையில் அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று காலை சென்னை, மும்பை, டெல்லி, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட 9 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. இதுபோன்று ஏற்கெனவே பல நேரங்களில் சோதனை நடந்துள்ளதால் கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் கிண்டல் ட்வீட்டை பதிவு செய்திருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory