» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை மக்களுக்கு சொல்வது மிக முக்கியம்: தமிழக அரசு பதில் மனு!

செவ்வாய் 23, நவம்பர் 2021 5:41:19 PM (IST)

ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மையை மக்களுக்கு சொல்வது மிக மிக முக்கியம் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த போது உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்களுக்கு பிறகு 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அப்போதைய மாநில அரசு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை 2017-ம் ஆண்டு செப்டம்பரில் நியமித்தது.

இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், தடை விதிக்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அப்துல்நசீர் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

விசாரணையின்போது ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறது. தேவையில்லாமல் வழக்கு விசாரணைக்கு தங்களது மருத்துவர்களை இழுப்பதாக அப்பல்லோ நிர்வாகம் குற்றம் சாட்டியது.மேலும் விசாரணை குழுவில் மருத்துவ நிபுணர்கள் இல்லை. மருத்துவர்கள் இல்லாத அந்த ஆணையத்தில் மருத்துவர்களை அழைத்து எப்படி விசாரிக்க முடியும் என்று தெரிவித்தது.

இதற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஒரு நல்ல மருத்துவமனையாகும். ஒரு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் மீது அவதூறு சொல்வதை ஏற்க இயலாது. ஆணையத்தின் செயல்பாட்டை அப்பல்லோ மருத்துவமனை தடுக்க நினைக்கிறது.

ஆணையம் என்பது உண்மையை கண்டறியும் குழுவே. நிபுணர் குழு அல்ல. நிபுணர்கள் குழுவில்தான் மருத்துவர்கள், நிபுணர்கள் இடம் பெற வேண்டும். ஆவணங்கள், ஆதாரங்களை திரட்டி அரசிடம் கொடுப்பதே ஆணையத்தின் பணியாகும். அதன் பிறகு அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மையை மக்களுக்கு சொல்வது மிக மிக முக்கியம் ஆகும். மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் விவரம் தெரிய வேண்டும். தேவைப்பட்டால் இந்த ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்களை சேர்க்கவும் தயாராக இருக்கிறோம். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுப்படுத்தவும் அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory