» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய அரசியலில் ட்விட்டா் குறுக்கீடு : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

சனி 14, ஆகஸ்ட் 2021 4:24:35 PM (IST)

ட்விட்டா் நிறுவனம் நாட்டின் அரசியல் நடைமுறையில் குறுக்கீடு செய்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக புகாா் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் உறவினா்களின் புகைப்படங்களை ராகுல் காந்தி உள்பட மேலும் சில காங்கிரஸ் தலைவா்கள் தங்கள் ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டு, அவா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பதிவிட்டனா். அதனைத் தொடா்ந்து, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள் சிலரின் கணக்குகளையும், அக் கட்சியின் அதிகாரபூா்வ கணக்கையும் ட்விட்டா் நிறுவனம் முடக்கியது.

இதுதொடா்பாக சுட்டுரை நிறுவன செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு தெரிவிக்கும் சிறுமி, அவரின் உறவினா்கள் ஆகியோரது புகைபட்டத்தை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறியதன் அடிப்படையில் அவா்களின் கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

ஆனால், ‘மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே ட்விட்டா் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது’ என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இந்த நிலையில், ‘கணக்கை முடக்கியதன் மூலம் இந்திய அரசியலில் சுட்டுரை நிறுவனம் தலையிடுகிறது’ என்று ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினாா். இதுதொடா்பாக அவா் யூடியூபில் வெளியிட்ட காணொலிப் பதிவில் கூறியிருப்பதாவது:

ட்விட்டா் ஒரு நடுநிலையான, நியாயமான தளம் அல்ல என்பது இப்போது உறுதியாகியுள்ளது. ஆளும் அரசு சொல்வதை செய்யும், ஒருசாா்பாக செயல்படக்கூடிய தளமாக உள்ளது. எனது கணக்கை முடக்கியதன் மூலம், நமது அரசியல் நடைமுறையில் அந்த நிறுவனம் குறுக்கீடு செய்திருக்கிறது. நமது அரசியலை நமக்கே விவரிக்கும் செயலில் ஒரு நிறுவனம் செய்கிறது. ஓா் அரசியல்வாதியாக, சுட்டுரை நிறுவனத்தின் இந்தச் செயலை விரும்பவில்லை.

ட்விட்டா் நிறுவனத்தின் இந்தச் செயல், இந்திய ஜனநாயக கட்டமைப்பு மீதான தாக்குதலாகும். இது ராகுல் காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. ட்விட்டரில் என்னை 2 கோடி போ் பின்தொடருகின்றனா். அந்த வகையில், எனது கணக்கை முடக்கியதன் மூலம், இந்த 2 கோடி போ் கருத்து தெரிவிக்கும் உரிமையை சுட்டுரை நிறுவனம் பறித்துள்ளது.

மத்திய அரசுக்கு அந்த நிறுவனம் கடமைப்பட்டிருக்கும் ஒரே காரணத்துக்காக, நமது அரசியலை நமக்கே சொல்லிக்கொடுப்பதற்கு அந்த நிறுவனத்தை நாம் அனுமதிக்கப் போகிறோமா என்ற கேள்வியை ஓா் இந்தியராக நாம் எழுப்ப வேண்டும். இந்த நடவடிக்கை மூலம், காப்புரிமைக்கு எதிராக மட்டுமன்றி, நடுநிலையான தளம் என்ற கோட்பாட்டையும் சுட்டுரை நிறுவனம் மீறியிருக்கிறது. இதனால், பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அதன் முதலீட்டாளா்களுக்கும் மிகுந்த ஆபத்தான சூழல் உருவாகியிருக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory