» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காங்கிரஸ், மூத்த தலைவர்கள் டுவிட்டர் முடக்கம்: மத்திய அரசைக் கண்டித்து ராகுல் தலைமையில் பேரணி

வியாழன் 12, ஆகஸ்ட் 2021 4:23:34 PM (IST)

காங்கிரஸ் கட்சி, 5 மூத்த தலைவர்களின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதின் எதிரொலியாக, மத்திய அரசை கண்டித்து ராகுல்காந்தி தலைமையில் எதிர்கட்சிகளின் சார்பில் டெல்லியில் பேரணி நடந்தது. 

டெல்லியில் பாலியல் பலாத்கார கொலைக்கு ஆளான சிறுமியின் பெற்றோர்  புகைப்படத்தை டுவிட்டரில் வௌியிட்ட விவகாரத்தால் காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது. 

அதனை  தொடர்ந்து நேற்றிரவு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப்  சுர்ஜேவாலா, ஏஐசிசி பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அஜய் மாக்கன்,  கட்சியின் மக்களவைத் தலைவர் மாணிக்கம் தாகூர், அசாம் பொறுப்பாளர் மற்றும்  முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் மகிளா காங்கிரஸ் தலைவர்  சுஷ்மிதா தேவ் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ  டுவிட்டர் கணக்கு  முடக்கப்பட்டு உள்ளதாக  அக்கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

இதுகுறித்து, காங்கிரசின் அதிகாரப்பூர்வ  பேஸ்புக் பக்கத்தில், காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கின்  முகப்பு பக்கத்தை பதிவிட்டு, தங்களது கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாக கூறி உள்ளது. அந்த முகப்பு  பக்கத்தில் இந்த கணக்கு டுவிட்டர் விதிகளை மீறியது என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், ராகுல்காந்தி, 5 காங்கிரஸ் தலைவர்கள், கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கம் அடுத்ததடுத்து முடக்கப்பட்டதை கண்டித்து, 14 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாடாளுன்ற வளாக அலுவலகத்தில் இன்று காலை சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னர், நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சவுக் வரை ராகுல்காந்தி தலைமையில் நடைபயணமாக கண்டன பேரணி நடத்தினர். இந்த பேரணியில், எம்பிக்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ், சஞ்சய் ராவத் (சிவசேனா) உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் 70க்கும் மேற்பட்ட எம்பிக்கள் வரை பங்கேற்றனர்.

தொடர்ந்து ராகுல்காந்தி கூறுகையில், ‘அவையில் பெண் எம்பிக்களிடம் அவைக் காவலர்கள் அத்துமீறி நடந்து கொண்டனர். எதிர்கட்சிகளின் குரல்களை மத்திய அரசு ஒடுக்குகிறது. நாட்டின் 60 சதவீத மக்களின் குரல்வளை ஒடுக்கப்பட்டன. கூட்டத் தொடரில் அலுவல்கள் முறையாக நடைபெறவில்லை. அவைக்குள் எங்களுக்கான பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டது. பெகாசஸ், விவசாயிகள் பிரச்னைகள் உட்பட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனுமதிக்கவில்லை. இத்தனை பிரச்னைக்கும் மத்தியில், நாடாளுமன்றத்தை 2 நாட்களுக்கு முன்னதாக முடித்துக் கொண்டனர். அவையில் எங்களை பேச அனுமதிக்காததால், தற்போது மக்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசு தான்’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory