» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பையில் 2 மாதங்களுக்கு பிறகு ஓட்டல், சலூன், உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு

செவ்வாய் 8, ஜூன் 2021 11:40:58 AM (IST)

மும்பையில் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று ஓட்டல், சலூன் மற்றும் பூங்காக்கள்,  உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டன.

மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது. தினந்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. பொது மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டைவிட்டு வெளியே வர அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 7 மணி முதல் 11 மணி வரை திறந்து வைக்கப்பட்டது. பின்னர் பாதிப்பு ஓரளவு குறைந்து அனைத்து வகையான கடைகளையும் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. 

இந்தநிலையில் மாநில அரசு கரோனா பாதிப்பு சதவீதம், ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதை அளவு கோலாக கொண்டு தளர்வுகளை அறிவித்து உள்ளது. மாவட்ட, மாநகர பகுதிகள் 5 வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதில் கரோனா பாதிப்பு சதவீதம் 5.56 ஆகவும், 32.51 சதவீதம் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி உள்ள, தலைநகர் மும்பை 3-வது பிரிவில் வந்தது. எனவே 3-வது பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட தளா்வுகள் நேற்று மும்பையில் அமலுக்கு வந்தது.

இதையடுத்து சுமார் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று மும்பையில் சலூன், அழகுநிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் திறந்து இருந்தன. மக்கள் ஆர்வமாக சென்று தங்களை அழகுப்படுத்தி கொண்டனர். இதேபோல காலை நேரத்தில் பூங்காக்கள், மைதானங்கள் திறந்து இருந்தன. அங்கு மக்கள் கூட்டமாக நடைபயிற்சியில் ஈடுபட்டதை காணமுடிந்தது. இதேபோல கடற்கரைகளிலும் நேற்று காலை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அதே நேரத்தில் திறக்க அனுமதி வழங்கி இருந்த போதும், மும்பையில் ஓட்டல்கள் பல இடங்களில் திறக்கப்படவில்லை. அவர்கள் வழக்கம் போல பார்சல், டெலிவிரியில் மட்டுமே ஈடுபட்டு இருந்தனர். மும்பை 3-வது பிரிவில் இடம்பிடித்ததால் நகரில் வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மூடியே இருந்தன. இந்தநிலையில் நேற்று முதல் பெஸ்ட் பஸ்கள் 100 சதவீத பயணிகளுடன் இயங்க தொடங்கின. கட்டுப்பாடுகள் அமலில் இருந்த போது பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் மின்சார ரயில்களில் பயணம் செய்ய பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே மின்சார ரயில்களில் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மும்பையில் தற்போது திருமணங்களில் அதிகபட்சம் 50 பேரும், இறுதி சடங்கில் 20 பேரும் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தளா்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பொதுமக்கள் எச்சரிகையுடன் இருக்க வேண்டும் என மாநகராட்சி கேட்டுகொண்டு உள்ளது. 

இது குறித்து டுவிட்டரில் மாநகராட்சி வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது: மும்பைக்கு ஒரு நினைவூட்டல்! நாம் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், கரோனா இல்லாத மும்பையை உருவாக்க வேண்டும் என்ற முக்கிய குறிகோளில் இருந்து விலகி சென்றுவிடக்கூடாது. பாதுகாப்புடன் அனைத்தும் திறக்கட்டும். அனைத்து முன்எச்சரிக்கைகளையும் பின்பற்றுவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது அமலுக்கு வந்து உள்ள தளர்வுகள் வரும் 15-ந் தேதியுடன் முடிகிறது. அதன்பிறகு கரோனா பாதிப்பு சதவீதம், ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதன் அடிப்படையில் கூடுதல் தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory