» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு

புதன் 2, ஜூன் 2021 12:08:27 PM (IST)

மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து, 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்தது. அப்போது, பிளஸ் 2 தேர்வுகளை ஒத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. வைரஸ் பரவல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், மாநில கல்வி அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருடன், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான மாநிலங்கள், பாதுகாப்பான முறையில் தேர்வுகளை நடத்தலாம் என, தெரிவித்தன.இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, டில்லியைச் சேர்ந்த மம்தா சர்மா என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் பதில் மனு தாக்கல் செய்ய, 3ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் கோரியது.இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பிரகாஷ் ஜாவடேகர் மற்றும் முக்கிய உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்

அப்போது, பிளஸ் 2 தேர்வுகளை நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து, மாநில அரசுகள் உட்பட, பல்வேறு தரப்பினரும் தெரிவித்த கருத்துக்களை, பிரதமரிடம் அதிகாரிகள் விரிவாக விளக்கினர். கூட்டத்தின் முடிவில், பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த உத்தரவு குறித்து, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மாணவர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியம்; அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது தெரியாமல், மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கவலை நிலவுகிறது; அதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

பல்வேறு மாநிலங்களிலும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது தேர்வுகளை நடத்துவது பாதுகாப்பாக தோன்றவில்லை.எனவே, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்வதாக, கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சிலும், தங்கள் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இன்று முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படாது; கட்டாயம் நடத்தப்படும் என, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் உறுதியாக கூறி வந்தார்.இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நேற்று ஆலோசனை நடந்தது. அப்போது, மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்ற வழக்கின் உத்தரவுக்கு ஏற்ப, தமிழக அரசும் முடிவெடுக்கலாம் என, தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கருதி, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதாக, பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்துவதா; ரத்து செய்வதா என, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று ஆலோசனை நடக்க உள்ளது. இதில், இறுதி முடிவு அறிவிக்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory