» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரஷியாவில் இருந்து 60 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் விமானத்தில் இந்தியா வந்தடைந்தது

திங்கள் 17, மே 2021 8:50:55 AM (IST)



ரஷியாவில் இருந்து மேலும் 60 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியா வந்தடைந்தது.

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 3 லட்சத்துக்கு மேல் பதிவாகி வருகிறது. அதே சமயத்தில் கரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. எனவே, வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகள் இறக்குமதி செய்யும் பணியும் நடந்து வருகிறது. ரஷிய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி, கரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக கருதப்படுகிறது. எனவே, இந்தியா மேற்கொண்ட முயற்சியின் பலனாக, கடந்த 1-ந் தேதி ரஷியாவில் இருந்து 1½ லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன.

மத்திய மருந்துகள் ஆய்வுக்கூடம் அதற்கு ஒப்புதல் அளித்தது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை ரூ.948 மற்றும் 5 சதவீத ஜி.எஸ்.டி. என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 14-ந் தேதி, ஐதராபாத்தில் முதல் முறையாக ஒரு பயனாளிக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தநிலையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 2-வது தொகுப்பு நேற்று இந்தியாவுக்கு வந்தது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.

அதில், 60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் இருந்தன. விமானத்தில் இருந்து தடுப்பூசி பெட்டிகள் இறக்கப்படும் புகைப்படத்தை ஸ்புட்னிக்-வி இணையதளம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிக்கோலே குடாஷேவ் கூறியதாவது: இந்த தடுப்பூசியின் செயல்திறன் உலகம் அறிந்ததுதான். புதிய உருமாறிய கரோனாவுக்கு எதிராகவும் இது சிறப்பாக செயல்படும். சமீபத்தில் அந்த தடுப்பூசி முதல் முறையாக செலுத்தப்பட்ட நிலையில், இந்த தொகுப்பு உரிய நேரத்தில் வந்துள்ளது. கூட்டு முயற்சிகள் மூலம் கரோனாவுக்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory