» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா பரவுவதை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பில்லை -மத்திய அரசு

திங்கள் 3, மே 2021 5:42:19 PM (IST)

இந்தியாவில் கரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பில்லை என மத்திய அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தாக்கம் உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள்  கரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டு மக்களை கதி கலங்க வைத்தது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குக்கு நிகரான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.  இந்நிலையில்,  சற்று ஆறுதல் தரும் வகையில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. 

நேற்று முன் தினம் 4.01 லட்சம், நேற்று 3.92 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 147- பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் கவலை அளிக்கும் விஷயமாக தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 732 ஆக உள்ளது. 

இந்தியாவில் இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  1 கோடியே 99 லட்சத்து 25 ஆயிரத்து 604- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,62,93,003- ஆக உள்ளது. தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 959- ஆக உள்ளது. கரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்து 642- ஆகும். 

நாடு முழுவதும் இதுவரை 15 கோடியே 71 லட்சத்து  98 ஆயிரத்து 207-  தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.  இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு சற்று குறைந்தது. இந்த நிலையில் நாடு தழுவிய கரோனா ஊரடங்கை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது. தேசிய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்தாலும், அது பொருளாதார பாதிப்பு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் வேலையிழப்புகளுக்கு காரணமாகி விடும் என மத்திய அரசு கருதுகிறது.

தொற்று பரவல் 15 விகிதத்திற்கும் அதிகமாக உள்ள சுமார் 150 மாவட்டங்களில் கடுமையான ஊரடங்கை கொண்டுவரலாம் என சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. என்றாலும், கும்பமேளா போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியவர்கள் சூப்பர்ஸ்பெரட்டர்களாக மாறி இரண்டு மற்றும் 3 ஆம் நிலை நகரங்களில் வைரஸ் தொற்றை பரப்பக்கூடும் என்ற அச்சமும் உருவாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products

Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory