» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு
வெள்ளி 8, மார்ச் 2024 4:32:25 PM (IST)
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி, "இன்று மகளிர் தினத்தை ஒட்டி வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள பல லட்சம் குடும்பங்களின் நிதிச் சுமையை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்கும். குறிப்பாக பெண் சக்திக்கு வலிமை தரும்.
சமையல் எரிவாயு சிலிண்டரை மேலும் எளிதாக வாங்கும் நிலையை உருவாக்குவதன் மூலம் குடும்பங்களின் நலனை உறுதி செய்வதோடு, ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் உருவாக்கலாம். பெண்களுக்கு வலிமை சேர்ப்போம் என்ற எங்களின் வாக்குறுதிக்கு இணங்கவும், அவர்களின் வாழ்தலை எளிதாக்குவதை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இதுவரை ரூ.918-க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் இனி ரூ.100 குறைக்கப்பட்டு ரூ.818-க்கு விற்கப்படும்.