» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தமிழக அரசின் 2024-25ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல்: முக்கிய அம்சங்கள்
திங்கள் 19, பிப்ரவரி 2024 10:49:16 AM (IST)
சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
தமிழக அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில், மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு விரைவில் எதிர்நோக்கப்படுவதால், வரும் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் பிப்ரவரி மாதமே தாக்கல் செய்யப்படுகிறது. நிதித் துறை பொறுப்பை ஏற்ற பிறகு, முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
முக்கிய அம்சங்கள்:
- தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
- சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் பொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
- அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.
- தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.
- முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்.
- ரூ.65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.
- கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்.
- கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும்.
- சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.
- விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
- ரூ.1000 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும்.
- 5 ஆயிரம் ஏரி, குளங்களை புனரமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
- 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு.
- முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம்.
- நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி.
- குடிசையில்லா தமிழ்நாட்டை உருவாக்க ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் அறிமுகம். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு.
- 2030க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். ஒரு கான்கிரீட் வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் ஒதுக்கப்படும்.
- சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
- சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு
- சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு
- வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி ஒதுக்கீடு
- பூவிருந்தவல்லியில் ரூ.500 கோடியில் திரைப்பட நகரம்.
- அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு.
- காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளை புனரமைக்க திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
- மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ரூ.13720 கோடி நிதி ஒதுக்கீடு.
- கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சாலைப்பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
- மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.3050 கோடி ஒதுக்கீடு.
- மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.