» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
திமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேறாமல் தமிழகம் திண்டாடுகிறது : இபிஎஸ்
சனி 27, ஜனவரி 2024 11:11:55 AM (IST)
திமுக ஆட்சியில் 4 பேர் முதல்வர் போல செயல்படுகின்றனர். அதனால்தான் எந்த திட்டமும் நிறைவேறாமல், தமிழகம் திண்டாடிக் கொண்டிருக்கிறது. என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலத்தை அடுத்த மல்லமூப்பம்பட்டியில் நேற்று நடைபெற்றது. திமுக, பாமக, கொமதேக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 700-க்கும் மேற்பட்டோர், கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியின்போது ஏழை,ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, அவர்களின் நலனுக்காக உழைத்தனர். கடந்த ஆட்சியில் சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. அதேபோல, ஏராளமான பள்ளி, கல்லூரிகளைத் திறந்து, ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளித்தோம்.
அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில்வதற்காக, மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள்ஒதுக்கீடு கொண்டு வந்ததால் 2,160 பேர் மருத்துவம் பயில்கின்றனர். தமிழகத்தில் 2.05 கோடி உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சி அதிமுக. அதேபோல, தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சிபுரிந்ததும் அதிமுகதான்.அதேநேரத்தில், திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் 8 மாதங்களாகிய நிலையில், என்ன நன்மை செய்துள்ளார்கள் என்று மக்களே கேள்வி எழுப்புகின்றனர்.
திமுக ஒரு குடும்ப கட்சி. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என ஒரு குடும்பத்தினர் மட்டுமே பதவிக்கு வருகின்றனர். சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் இன்பநிதியையும் அழைத்து வந்துவிட்டனர். இதன்மூலம் மன்னராட்சியைக் கொண்டுவர திமுக முயற்சிக்கிறது.
ஜனநாயக நாட்டில் ஒரே குடும்பத்தினர் ஆட்சிக்கு வருவது ஏற்புடையதல்ல. அது சர்வாதிகாரம் ஆகிவிடும். திமுக ஆட்சியில் 4 பேர் முதல்வர் போல செயல்படுகின்றனர். அதனால்தான் எந்த திட்டமும் நிறைவேறாமல், தமிழகம் திண்டாடிக் கொண்டிருக்கிறது.
சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குசீர்குலைந்து, கொலை, கொள்ளை,பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. எல்லா இடங்களிலும் கஞ்சா கிடைக்கிறது. இதனால் மாணவர்கள் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. பத்திரிகையாளர் கள், அரசு அலுவலர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லை. இதற்கெல்லாம் திமுக பதில் சொல்லியே தீர வேண்டும்.
திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அதிமுக ஆட்சியின்போது, வறட்சி, புயல் எனஇடர்பாடுகள் வந்தபோதும், விலைவாசியை கட்டுக்குள்வைத்து, மக்களைப் பாதுகாத்தோம். ஏழை மக்களுக்காக அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை, திமுக அரசு நிறுத்திவிட்டது. இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.