» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அதிமுக சாதனையை தனது சாதனைபோல் காட்டி கொள்வதா? மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கண்டனம்

ஞாயிறு 12, டிசம்பர் 2021 11:51:17 AM (IST)

மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் தமிழகத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள் என்று பத்திரிகை மூலம் விளம்பரப்படுத்திக் கொள்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இந்தியாவில் உள்ள 593 மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 69 மருத்துவக் கல்லூரிகள் இருப்பதாகவும், மொத்தமுள்ள 45,698 மருத்துவ இடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 10,375 மருத்துவ இடங்கள் இருப்பதாகவும் மொத்தமுள்ள 312 அரசுக் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 37 அரசுக் கல்லூரிகள் இருப்பதாகவும் மொத்தமுள்ள 22,933 மருத்துவ இடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 5,125 மருத்துவ இடங்கள் இருப்பதாகவும் தேசிய மருத்துவ குழு தெரிவித்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இதற்குக் காரணம் அ.தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தான் என்பதை ஆணித்தரமாக நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

1954-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் எட்டு மருத்துவக்கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இதனையடுத்து எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது கடலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டன. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஈரோடு, கன்னியாகுமரி, தேனி, வேலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, சென்னை, கோயமுத்தூர் என எட்டு மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஜெயலலிதா வழி காட்டுதலோடு நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட்டன. மருத்துவதிற்கென தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என்ற தனிப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதும் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தான்.

இது தவிர, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற அடிப்படையில், 2019-ம் ஆண்டு மத்திய அரசின் 60 விழுக்காடு நிதி உதவியுடன் ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் துவக்க மத்திய அரசின் ஆணையைப் பெற்று அதற்கான கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி சரித்திர சாதனையை அ.தி.மு.க. அரசு படைத்தது. இதன் விளைவாக ஒவ்வொரு மருத்துவக்கல்லூரியிலும் 150 இடங்கள் என 1,650 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் மட்டும், புதிதாக ஆறு மருத்துவக்கல்லூரிகளை துவங்கிய வகையில் 700 இடங்கள், ஏற்கெனவே செயல்பட்டு வந்த அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடங்களை உயர்த்திய வகையில் 650 இடங்கள் புதிதாக அனுமதிக்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லூரி மூலம் 1,650 இடங்கள் என 3,000 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டன.

உண்மை நிலை இவ்வாறிருக்க, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் தமிழகத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள், என்று பத்திரிகை மூலம் விளம்பரப்படுத்திக் கொள்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமமாகும். அ.தி.மு.க. படைத்த சாதனையை தன் சாதனை போல் காட்டிக்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வந்து ஆறு மாதமே ஆகியுள்ள நிலையில் இத்தனை மருத்துவ இடங்களை உருவாக்க முடியுமா என்பதை மக்கள் நிச்சயம் சிந்திப்பார்கள். மக்களுக்கு உண்மை எது என்பது நன்கு தெரியும். இனி வருங்காலங்களிலாவது "உண்மை எனும் கைவிளக்கே சான்றோர்க்கு வழிகாட்டும் விளக்கு” என்பதற்கேற்ப தி.மு.க. நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory