» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவிப்பு வரலாற்றுத்திரிபு! - சீமான் கண்டனம்

சனி 6, நவம்பர் 2021 10:21:37 PM (IST)

சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருப்பது தமிழர் அடையாள அழிப்பைச் செய்யும் வரலாற்றுத்திரிபு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக ஏற்று அறிவித்திருக்கும் திமுக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழறிஞர்களும், தமிழ்ப்பெரியோர்களும் தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு எனச் சான்றுகளோடு எடுத்துக்காட்டி, நிறுவிய பின்னரும், கடந்தாட்சியின் தவறான முடிவைக் காரணமாகக் காட்டி, சித்திரை முதல் நாளையே புத்தாண்டென மீண்டும் அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தேசிய இனமான தமிழ்த்தேசிய இனம் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வேளாண்மை, அறிவியல், மெய்யியல் என எல்லாவற்றிலும் மற்ற தேசிய இனங்களுக்கு முன்மாதிரியாகவும், முன்னத்திஏராகவும் திகழ்ந்து வருகிறது. தனித்த வரலாற்றுப்பெருமைகளும், ஒப்புயர்வற்ற சிறப்புகளும் கொண்ட தமிழ்ப்பேரினமானது இடையில் வந்து குடியேறிய ஆரியர்களின் பண்பாட்டுப்படையெடுப்பினாலும், அதிகார ஆதிக்கத்தினாலும் எல்லாத் தொன்ம அடையாளங்களையும் சிதையக்கொடுத்து, ஆரியத்தின் திருடித் தன்வயப்படுத்தும் கொடுஞ்சூழ்ச்சிக்கு இரையானது. அந்தவகையில், தைத்திங்கள் முதல் நாளன்று கொண்டாடப்பட்ட தமிழர்களின் புத்தாண்டு திருநாள், ஆரியத்திரிபுவாதத்தால் சித்திரை முதல் நாளாக மாற்றப்பட்டது. இச்சூழ்ச்சியை வரலாற்றுச்சான்றுகளோடும், இலக்கியத்தரவுகளோடும் எடுத்துரைத்து, தைத்திங்களே தமிழர்களின் புத்தாண்டு நாள் எனத் தமிழ் முன்னோர்களும், அறிஞர் பெருமக்களும் நிறுவி நிலைநாட்டினர்.

மறைமலை அடிகளார், தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார், மு.வரதராசனார், இறைக்குருவனார், சின்னப்பத்தமிழர், கி.ஆ.பெ.விசுவநாதம், திரு.வி.க, பாரதிதாசன், சோமசுந்தர பாரதியார் எனப்பெரும் சான்றோர் கூட்டம், அதற்காக உழைத்திட்டு ஆய்வுரை மூலம் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டென அறுதியிட்டுக்கூறி, பேரறிவிப்பு செய்திட்டது.

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப்புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு! - என உரத்து முழங்கினார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன்.

பன்னெடுங்காலமாகத் தமிழ் மூத்தோரும், அறிஞர் பெருமக்களும் தை முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடி வந்த நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அன்றைக்கு முதல்வராக இருந்த ஐயா கருணாநிதி அவர்கள் அதனை அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டார். ஆனால், அதன்பின் ஆட்சிக்கு வந்த அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தமிழறிஞர்களின் கருத்துகளையோ, தமிழ்த்தேசிய இனத்தின் தொன்ம விழுமியங்களையோ துளியும் மனதில் கொள்ளாது, தான்தோன்றித்தனமாக சித்திரை திங்கள் முதல்நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்து, ஆரியக்குணத்தையும், அதிகாரச்செருக்கையும் வெளிப்படுத்தியது.

இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான அரசுப்பொதுவிடுமுறை நாட்கள் பட்டியலிலும் சித்திரை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு என திமுக அரசால் அறிவிக்கப்பட்டிருப்பது ஆரியத்தின் நயவஞ்சகச்சூழ்ச்சிக்கும், வரலாற்றுத்திரிபுகளுக்கும் துணைபோகும் பச்சைத்துரோகமாகும். ஆரியத்திடம் திராவிடம் சரணடைந்து, தமிழர் அடையாளங்களை அடமானம் வைக்க முனையும் சந்தர்ப்பவாதமாகும்.

தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிந்த நவம்பர் முதல் நாள், ‘தமிழ்நாடு நாள்’ எனக் கொண்டாடப்படுவதை அவசர அவசரமாக சூலை 18 க்கு மாற்றிய தமிழகத்தின் முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், தமிழ்ப்புத்தாண்டை சித்திரை முதல் நாளிலிருந்து தை முதல் நாளுக்கு மாற்றத்தயங்குவது ஏன்? இதுதான் ஆரியத்தை திராவிடம் எதிர்க்கிற போர்த்திறனா? இதுதான் ஆரியர்களுக்கெதிரான திராவிடர்களின் சமரசமற்ற சண்டையா?

‘கலைஞரின் மகன் நான்’ என மேடைதோறும் கூறி, புளங்காகிதம் அடைந்து கொள்ளும் ஐயா ஸ்டாலின் அவர்கள், ஐயா கருணாநிதி அறிவித்த தை முதல் நாளினைத் தமிழ்ப்புத்தாண்டாகக் கடைபிடிக்காது, அம்மையார் ஜெயலலிதா அறிவித்த சித்திரை முதல் நாளினைப் புத்தாண்டாகக் கடைப்பிடிப்பது வெட்கக்கேடு இல்லையா? திராவிடமென்றால் என்னவெனக் கேட்பதையே கோமாளித்தனமெனும் மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், ஆரியர்கள் கொண்டாடும் சித்திரை முதல் நாளினைத், தமிழர்களின் புத்தாண்டு நாளாகக் கடைபிடிக்கச் சொல்வது கோமாளித்தனத்தின் உச்சமில்லையா?

புரட்சிப்பாவலர் பாரதிதாசனும், பாவலேறு பெருஞ்சித்திரனாரும், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரும், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதமும், தமிழ்ப்பெருங்குடி மக்களும் அறிவித்த திருநாளைப் புறக்கணித்து, சித்திரை முதல் நாளினைத் தமிழர் புத்தாண்டு நாளாக அறிவித்திருப்பது ஆரியத்திடம் மண்டியிடும் அடிவருடித்தனமின்றி வேறில்லை.

ஆகவே, தமிழ்ப்பேரறிஞர்களின் ஆய்ந்துணர்ந்த முடிவையும், அவர்களது வரலாற்றுவழிப்பட்ட அறிவையும் மனதிலேந்தி, தமிழ்த்தேசிய இனத்தின் புத்தாண்டு நாளாக தை முதல் நாளையே அறிவிக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

sivakumarNov 8, 2021 - 03:35:00 PM | Posted IP 108.1*****

இப்போதுதான் இது போல நல்ல விஷயங்களை சொல்லுகிறார் செபாஸ்டியன் -- keep it up

kumarNov 8, 2021 - 10:58:41 AM | Posted IP 173.2*****

en pattan, muppattan kondadiyathu chithirai ondrai than thamil puththandaga...manamulla thamilan enakku chithirai ondruthan thamil puththandu....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory