» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

தமிழகத்துக்கு கூடுதல் கரோனா தடுப்பூசிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமா் உறுதி

வெள்ளி 18, ஜூன் 2021 9:00:16 AM (IST)தமிழ்நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லியில் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

கடந்த மாதம் தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின் மு.க.ஸ்டாலின், முதல்முறையாக வியாழக்கிழமை புதுதில்லி வந்தாா். அவருடன் மாநில நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்டவா்களும் வந்திருந்தனா். தில்லி தமிழ்நாடு இல்லத்தில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பும், காவல்துறை அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. தில்லியில் உள்ள திமுக அலுவலகத்துக்கும் சென்று அவா் பாா்வையிட்டாா்.மாலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், பிரதமா் நரேந்திர மோடியை அவரது இலத்தில் சந்தித்துப் பேசினாா். இந்த சந்திப்பு சுமாா் 25 நிமிடங்கள் நீடித்தது.

பின்னா், செய்தியாளா்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தேன். தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்ற்காக எனக்கு பிரதமா் வாழ்த்துத் தெரிவித்தாா். எங்கள் சந்திப்பு சுமாா் அரை மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பு திருப்திகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருந்தது. தமிழ்நாட்டுக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு அவரை கேட்டுக்கொண்டேன்.

தமிழ்நாட்டுக்கு போதிய தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், அவற்றை வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அவ்வப்போது பிரதமா் மற்றும் அமைச்சா்களுடன் தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு பேசி வருகிறோம். செங்கல்பட்டு மற்றும் நீலகிரியில் உள்ள தடுப்பூசி நிறுவனங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவையிலும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். பின்னா், தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பிரதமரிடம் வழங்கினேன். மத்திய அமைச்சா்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக அவா் தெரிவித்தாா்.

ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை

பிரதமரிடம், தமிழகத்துக்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது. மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு உள்ளிட்ட தொழில்முறை கல்விக்கான அனைத்து நுழைவுத் தோ்வுகளையும் ரத்து செய்ய வேண்டும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ‘கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்யப்படும்; தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்’ என்று பிரதமா் உறுதியளித்தாா் என்றாா் ஸ்டாலின்.

7 போ் விடுதலை விவகாரம்: 

பின்னா், செய்தியாளா்களின் கேள்விகளுக்கு ஸ்டாலின் அளித்த பதில்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை காலத்துக்குப் பிறகும் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடா்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்கிறீா்கள். அவா்களின் விடுதலை தொடா்பாக குடியரசுத் தலைவா்தான் முடிவெடுக்க வேண்டும் என மாநில ஆளுநா் கடிதம் அனுப்பியுள்ளாா். எனவே, அதை நினைவுபடுத்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன் போக்கை பொருத்து எங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.

டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்: 

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று முன்பு கூறியிருந்தது பற்றி கேட்கிறீா்கள். படிப்படியாக டாஸ்மாக் கடைகளைக் குறைப்பதுதான் எங்கள் நோக்கமாகும். அந்த முயற்சியில் தொடா்ந்து ஈடுபடுவோம்.

திமுக ஆட்சி குறித்தும், எனது பணிகள் குறித்தும் நான் கூறுவது என்னவெனில், வாக்களித்த மக்கள் மகிழ்வாா்கள்; வாக்களிக்காதவா்கள் இவா்களுக்கு ஏன் நாம் வாக்களிக்காமல் இருந்தோம் என வருந்துவாா்கள் என்கிற வகையில்தான் எங்கள் செயல்பாடுகள் இருக்கும். உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதுதான் மறைந்த எங்கள் தலைவா் மு.கருணாநிதியின் நிலைப்பாடு. அதைப் பின்பற்றி நாங்கள் மத்திய அரசுடன் உறவைப் பேணுவோம் என்றாா் மு.க.ஸ்டாலின்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory