» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பெட்ரோல் மீதான கலால் வரியை உயர்த்தி மோடி அரசு கொள்ளையடிக்கிறது: காங்கிரஸ் கடும் விமர்சனம்

சனி 14, மார்ச் 2020 4:08:50 PM (IST)

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி மோடி அரசு மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடந்த 2004-ம் ஆண்டு இருந்த விலைக் குறைவைப் போல் பேரல் ஒன்று 36 டாலராகக் குறைந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.8 வரை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்றார்போல் நாள்தோறும், சில பைசாக்கள் வீதம் பெட்ரோல், டீசல் விலையும் குறைந்துவந்தது. இந்நிலையில், திடீரென பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ3 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த வரி உயர்வு மூலம் அடுத்த நிதியாண்டில் அரசுக்கு ரூ.45 ஆயிரம் கோடி நிதி கிடைக்கும்.

இந்த வரி உயர்வு மக்களை நேரடியாகப் பாதிக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தாலும், கூடுதல் வரிகள் அடிப்படையில் சில்லரை விற்பனையில் லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.3 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிகரிப்பைக் காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித்தொடர்பாளர் அஜய் மக்கான் நிருபர்களிடம் கூறியதாவது: சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த பலனை மக்களுக்கு வழங்கும் விதத்தில் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையை 40 சதவீதம் வரை மத்திய அரசு குறைக்க வேண்டும்.

கடந்த 2014-15-ம் ஆண்டில் இதேபோன்று தான் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் அந்தப்பலனை மக்களுக்கு வழங்கவில்லை. பெட்ரோலில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.22.98 பைசாவும், டீசலில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.18.33 பைசாவும் இதுவரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிரமதர் மோடி அரசு 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது, பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.9.48 பைசா கலால் வரி இருந்தது. , டீசலில் ரூ.3.56பைசா இருந்தது. ஆட்சிக்கு வந்தபின் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 12 க்கும் மேற்பட்ட முறை கலால் வரியை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி மோடி, அமித் ஷா தலைமையிலான அரசு மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கிறது. 

ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலியப் பொருட்கள் வர வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தும் பெட்ரோலியப் பொருட்கள் மீது தொடர்ந்து அதிகமான வரி விதிக்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாகக் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதம் அளவுக்குச் சரிந்தபோதிலும், பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையைக் குறைக்காமல் இருந்ததற்கு பாஜக அரசின் மோசமான மக்கள் விரோத கொள்கைகள் காரணம். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் வீழ்ச்சிஅடைந்தவிட்டதால், அதன் பலனை மக்களுக்கு வழங்க மத்திய அரசு முன்வரவேண்டும். பெட்ரோல், டீசல் விலையை 35 முதல் 40 சதவீதம் வரை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அஜய் மக்கான் தெரிவித்தார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications
Thoothukudi Business Directory