» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

சட்டப்பேரவை தேர்தலில் ரஜினியை எதிர்த்து போட்டியா? உதயநிதி ஸ்டாலின் பேட்டி

புதன் 22, ஜனவரி 2020 12:30:13 PM (IST)

கட்சித் தலைமை கட்டளையிட்டால் சட்டப்பேரவை தேர்தலில் ரஜினியை எதிர்த்து போட்டியிடுவேன் என திமுக இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். 

பெரியார் நடத்திய பேரணி குறித்து ரஜினி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த  பதில்:- பெரியார் பற்றிய ரஜினியின் கருத்துக்கு தி.மு.க தலைவர் கண்டனம் தெரிவித்துவிட்டார். வீரமணி ஐயா கோர்ட்டுக்கு சென்று அவர் கருத்து தவறு என்பதை நிரூபிப்போம் என்று சொல்லிவிட்டார். ஏற்கனவே ஒரு பத்திரிகை இதை செய்தியாக்கி பின்னர் மன்னிப்பு கேட்டது. அதே நிலை ரஜினிக்கும் ஏற்படும்.

முரசொலி குறித்து ரஜினி பேசியது குறித்து? 

பதில்:- முரசொலி விழாவுக்கு நான் தான் அவரை நேரில் சென்று அழைத்தேன். அவருக்கு தி.மு.க நடத்தும் பத்திரிகை முரசொலி என்று தெரிந்திருக்கிறது. அ.தி.மு.க நடத்தும் பத்திரிகை துக்ளக் என்று நினைத்து சொல்லிவிட்டார் என்று நினைக்கிறேன். இதை விட்டுவிடுங்கள். இலவசமாக விளம்பரம் கொடுத்துள்ளார்கள்.

கேள்வி:- சினிமா சங்கங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்றது பற்றி?

பதில்:- நமது நாட்டில் பாராளுமன்றத்துக்கே எளிதில் தேர்தல் நடத்திவிட முடிகிறது. 3 ஆயிரம் ஓட்டு கூட இல்லாத நடிகர் சங்க தேர்தலுக்கு பதிவான ஓட்டுகளை எண்ண கூட முடியவில்லை. முக்கிய சங்கங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்கு செல்வது சினிமாவுக்கு ஆரோக்கியம் இல்லை. விஷால் எனது தந்தையை சந்தித்தார் என்பதற்காகவே பழிவாங்கப்படுகிறார். அவரை பழி வாங்குவதாக நினைத்து சங்கங்களையும் கைப்பற்றி முடக்கி விட்டார்கள். விஷால் அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான் அவர்கள் நோக்கம்.

கேள்வி:- தாத்தா வாழ்க்கையை படமாக்குவீர்களா?

பதில்:- அவர் உயிரோடு இருக்கும்போதே நான் ஆசைப்பட்டேன். என்னை வைத்து எடுக்க முயற்சி எடுத்தார்கள். நான் விளையாடுகிறீர்களா? என்று கேட்டேன். இப்போது சிலர் இணைய தொடருக்காக அணுகியுள்ளார்கள். சரியான குழு அமைந்தால் நடக்கும்.

கேள்வி:- சென்னை மேயர் தேர்தலில் போட்டியிடுவீர்களா?

பதில்:- முதலில் ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தல் நடத்தட்டும். பார்க்கலாம். அதை கட்சி தான் முடிவெடுக்க வேண்டும். கட்சி

சொன்னால் தேர்தலில் நிற்பேன். அது எந்த தேர்தலாக இருந்தாலும்.

கேள்வி:- டுவிட்டரில் ரஜினியை தொடர்ந்து விமர்சிப்பது ஏன்?

பதில்:- நான் பொதுவாக சொல்லும் கருத்தை ரஜினியுடன் தொடர்பு படுத்திக்கொள்கிறார்கள். அவரை குறிப்பிடவே இல்லையே... முதலில் அவர் அரசியலுக்கு வரட்டும். அதன் பின் அவருக்கு பதில் தருகிறேன்.

கேள்வி:- சட்டமன்ற தேர்தலில் ரஜினியை எதிர்த்து களம் இறங்குவீர்களா?

பதில்:- தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. கட்சி கட்டளையிட்டால் போட்டியிடுவேன். ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும். பின்னர் பார்க்கலாம். கட்சி சொன்னால் யாரை எதிர்த்தும் போட்டியிடுவேன்.

கேள்வி:- கலைஞருக்கு பாரத ரத்னா தரவேண்டும் என்ற கோரிக்கை?

பதில்:- கலைஞருக்கு எத்தனை விருதுகள் கொடுத்தாலும் அது விருதுக்கு தான் பெருமை. அவர் அத்தனை சாதனைகளை செய்து

இருக்கிறார். கட்சி சார்பில் இது தொடர்பாக பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications





Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory