» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி : ஆட்சியை தக்கவைத்தார் எடியூரப்பா

செவ்வாய் 10, டிசம்பர் 2019 8:59:11 AM (IST)

கர்நாடகத்தின் 15 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 12 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை தக்க வைத்துள்ளது.

கடந்த ஆண்டு எச்.டி. குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கர்நாடகத்தில் ஆட்சி அமைத்தது. ஆனால் 14 மாதங்களுக்கு பின் கூட்டணி அரசை சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை திடீரென்று ராஜினாமா செய்ததால் குமாரசாமி அரசு பெரும்பான்மை இழந்து ஆட்சி கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைத்தது. இதற்கிடையில் பதவியை ராஜினாமா செய்த 17 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 17 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

காலியான 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாஸ்கி மற்றும் ஆர்.ஆர். நகர் தொகுதிகள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இங்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தகுதி நீக்கப்பட்ட 17 எம்.எல்.ஏக்களில் 13 பேர் தாங்கள் முன்பு வெற்றி பெற்ற அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டனர்.  மேலும் காங்கிரஸ் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் இந்த தேர்தலில் தனியாக போட்டியிட்டது. இந்நிலையில் டிசம்பர் 5ம் தேதி கர்நாடகத்தில் 15 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. கர்நாடக இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் பாஜக முன்னிலை வகித்து வந்தது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் தேர்தல் நடந்த 15 தொகுதிகளில் 12 தொகுதிகளை பாஜக கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கைகளில் இருந்து வந்த மாண்டியா தொகுதியில் பாஜக தன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நான்கு மாதங்கள் முன் ஆட்சி அமைத்த எடியூரப்பா தலைமையிலான அரசு பெரும்பான்மை பெற 6 இடங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் இன்று 12 இடங்களை கைப்பற்றியுள்ளதால் பாஜக அரசின் பலம் 105ல் இருந்து 117 ஆக உயர்ந்துள்ளது. இதனால் எடியூரப்பா தன் ஆட்சியை தக்கவைத்துள்ளார். மேலும் பாஜக சார்பில் போட்டியிட்ட தகுதிநீக்கப்பட்ட 13 எம்.எல்.ஏக்களில் 11 பேர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தேர்தல் வெற்றிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடியூரப்பா தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் அமைச்சரவையில் பதவி அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார். மேலும் மக்கள் நல்ல தீர்ப்பை அளித்துள்ளதாகவும் இனி கர்நாடகத்தில் நிலையான ஆட்சியை அளிக்க முடியும் என எடியூரப்பா கூறினார்.  கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மீதி ஒரு இடத்தை சுயேட்சை வேட்பாளர் கைப்பற்றினார்.கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தன் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory