» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
வாக்கு சதவீதம் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்
சனி 25, மே 2019 10:21:05 AM (IST)
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள 2019 மக்களவைத் தேர்தலிலும், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலிலும் 3 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குகளைத் தேமுதிக பெற்றிருப்பதால், அந்தக் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஏனெனில் மாநில கட்சிக்கான அங்கீகாரம் பெறுவதற்கு மாநிலத்தில் பதிவான வாக்குகளில் 6 சதவீத வாக்குகளை ஒரு கட்சி பெறுவதோடு, ஒரு மக்களவைத் தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதியாகும். 2005-ஆம் ஆண்டு மதுரையில் மிகப் பெரிய மாநாட்டை நடத்தி தேமுதிக கட்சியைத் தொடங்கினார் நடிகர் விஜயகாந்த். தமிழகத்தில் அதிமுக- திமுக ஆகிய இரு பிரதான கட்சிகளுக்கு மாற்றாக தேமுதிக இருக்கும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே தேர்தலைச் சந்திக்கும் என்றும் அறிவித்தார்.
இதன் காரணமாக, அந்தக் கட்சி முதன் முதலில் சந்தித்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலிலேயே, 232 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, ஒட்டுமொத்தமாக 27 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகளைப் பெற்று அசத்தியது. அதோடு, விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் மட்டும் வெற்றியைப் பெற்றார். கட்சித் தொடங்கிய ஓராண்டிலேயே தேர்தலைச் சந்தித்து 8.38 சதவீத வாக்குகளை தேமுதிக பெற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதற்கடுத்து வந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து களம் கண்டது. இந்தத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறாவிட்டாலும், ஒட்டுமொத்தமாக 31 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. பதிவான வாக்குகளில் இது 10.3 சதவீதமாகும். கட்சிக்கு பெரிய வெற்றி எதுவும் இல்லாவிட்டாலும், தேமுதிக-வின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இந்தச் சூழலில், 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், கட்சி ஆரம்பித்தபோது மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. இதில் 29 இடங்களை அக் கட்சி கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் கட்சி பெற்ற ஒட்டுமொத்த வாக்கு 7.9 சதவீதமாக குறைந்தது.
இந்தத் தேர்தலுக்குப் பிறகு, அக் கட்சி தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று 14 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. இதில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்ததோடு, கட்சியின் வாக்கு சதவீதமும் 5.1 ஆக சரிந்தது. ஒட்டுமொத்தமாக 20 லட்சத்து 79 ஆயிரம் வாக்குகளை மட்டுமே தேமுதிகவால் பெற முடிந்தது. இதைத் தொடர்ந்து 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்று 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக, ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. கட்சியின் வாக்கு சதவீதமும் 2.39 ஆக சரிந்தது. அக்கட்சி வெறும் 10 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றது.
இப்போது 2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று விருதுநகர், திருச்சி, கள்ளக்குறிச்சி, வடசென்னை ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் அக் கட்சி தோல்வியைச் சந்தித்ததோடு, அக் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 2.19 சதவீதமாக குறைந்துள்ளது.
ஒரு மாநில கட்சி அங்கீகாரம் பெற அல்லது அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அந்த மாநிலத்தில் பதிவாகியிருக்கும் ஒட்டுமொத்த வாக்குகளில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளை பெற்றிருப்பதோடு, ஒரு மக்களவைத் தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்கவேண்டும். அல்லது, 6 சதவீத வாக்குகளையும், 2 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் ஒரு கட்சி பெற்றிருக்கவேண்டும். அல்லது, ஒட்டுமொத்த சட்டப்பேரவை உறுப்பினர் இடங்களில் 3 சதவீத உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை 2 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருக்கவேண்டும். அப்போதுதான் ஒரு மாநில கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
ஆனால், தொடர்ந்து இரண்டு தேர்தல்களிலும் 3 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருக்கும் தேமுதிகவுக்கு, அதன் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டிருப்பதோடு, வரும் தேர்தல்களில் அக் கட்சிக்கு முரசு சின்னம் கிடைப்பதும் சந்தேகம்தான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட வேட்பாளர்களில், தேமுதிக வேட்பாளர்கள் இருவர் மட்டும்தான் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று படு தேல்வியைச் சந்தித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற மற்ற வேட்பாளர்கள் அனைவரும் 20 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயிகளின் டிராக்டர் பேரணி குறித்து உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்
புதன் 20, ஜனவரி 2021 5:29:20 PM (IST)

ரசிகர்கள் விரும்பிய கட்சியில் இணைந்து செயல்படலாம் : ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 12:35:52 PM (IST)

தமிழகத்திலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக வெற்றி பெறப்போகிறது: நடிகை குஷ்பு பேச்சு
ஞாயிறு 10, ஜனவரி 2021 6:40:06 PM (IST)

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தீர்மானம் : முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம்
வெள்ளி 1, ஜனவரி 2021 12:08:48 PM (IST)

புதுவையில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பஞ்சாயத்து தேர்தல் நடத்தவில்லை: பிரதமர் அதிருப்தி
சனி 26, டிசம்பர் 2020 4:54:36 PM (IST)

மக்களை பாதிக்கும் சிலிண்டர் விலையேற்றத்தை திரும்பப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
புதன் 16, டிசம்பர் 2020 11:47:40 AM (IST)
