» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழர்களின் உணர்வுடன் “விபரீத விளையாட்டு” நடத்த வேண்டாம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

சனி 2, மார்ச் 2019 5:44:38 PM (IST)

தமிழர்களின் உணர்வுடன் "விபரீத விளையாட்டு” நடத்த வேண்டாம் என  மத்திய பாஜக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை : வேதங்களில் இருந்து திருக்குறள் வந்தது” என்று அய்யன் திருவள்ளுவரை சிறுமைப்படுத்தி, திரிபு வாதத்தை முன்வைத்த  முன்னாள் தொல்லியியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் "குடியரசுத் தலைவர் விருதுகளைத் தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மொழிக்கு எதிராகவும், தமிழ் கலாச்சாரத்தினை தன் மனம் போன போக்கில் திரித்து எழுதி வருகிறவர் நாகசாமி. பாஜக மற்றும் மதவாத சக்திகளின் கவனத்தைத் தன்பால் திருப்பிடும் நோக்கில் எழுதி வரும் அவருக்கு ஏற்கனவே பத்மவிபூசன் விருதை வழங்கி கவுரவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு.

இப்போது செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திலும் ஒரு பொறுப்பினை வழங்கி செம்மொழித் தமிழுக்கும்  பேரிழுக்கு ஏற்படுத்த முயற்சி செய்து பார்த்திருக்கிறது.ஏற்கனவே செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு போதிய நிதி ஒதுக்காமல், தமிழ் மொழி பற்றி ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் பா.ஜ.க. அரசின் கீழ் அந்த நிறுவனம் அடியோடு முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்  தேர்தல் வருகின்ற நேரத்தில்- அவசர அவசரமாக தமிழ்நாட்டு மக்களை இதன் மூலமாகவும் ஏமாற்ற "விருது கமிட்டி” ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷமப்  பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் ஒருவர் எப்படி செம்மொழித் தமிழாய்வு விருதுகளை பாரபட்சமின்றி தேர்வு செய்ய முடியும்? தமிழ்மொழியை சிறுமைப்படுத்தி - சமஸ்கிருதத்திற்கும், வேதங்களுக்கும் தடையின்றி தாலாட்டுப் பாடி வரும் நாகசாமிக்கு ஏன் அக்குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது? செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தலைவராக இருக்கும் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி, சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளாமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்மொழிக்குச் செய்யும் மாபெரும் துரோகம் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் "குடியரசுத் தலைவர் விருதுகள் தேர்வு செய்யும் கமிட்டியில்” உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திரு.நாகசாமியை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள். நல்ல தமிழறிஞர்களை அக்குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.தமிழர்களின் உணர்வுடன் "விபரீத விளையாட்டு” நடத்த வேண்டாம் என்றும் மத்திய பா.ஜ.க. அரசை எச்சரிக்க விரும்புகிறேன்.இவ்வாறு, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

தேவேந்திர குல வேளாளர்கள்Mar 7, 2019 - 12:54:18 PM | Posted IP 162.1*****

தெலுங்கை தாய் மொழியாக கொண்ட மு கருணாநிதி குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இயங்கும் திமுக , தமிழ் மொழியில் மேடை பேச்சு பேசி தமிழர்களை ஏமாற்றிவருகிறது . உங்க வண்டவாளம் எல்லாம் இப்ப தமிழருக்கு நன்குபுரிந்துவிட்டது . இனிமேலும் தமிழரை ஏமாற்றி அரசியல் செய்யலாம் என்று கனவு காண வேண்டாம்

மக்கள்Mar 4, 2019 - 09:09:38 AM | Posted IP 162.1*****

நாசகார திராவிட நாத்திக பரப்புரை. இலங்கை தமிழர்களை, தமிழ் மீனவர்களை வேட்டையாடிய மற்றும் துணை போன கட்ச்சிகள் இந்த திமுக மற்றும் காங்கிரஸ். நீலி கண்ணீர். பைத்தியக்கார வைகோ போக்கிடம் இல்லாம சரணடைந்து விட்டார்.

சாய்Mar 3, 2019 - 06:14:48 PM | Posted IP 172.6*****

லட்சக்கணக்கில் தமிழனை கொன்றீர்களே - அது என்னவாம் - அப்ப உங்க தமிழ் உணர்வு எங்க போச்சு - மானம்கெட்ட வைகோவிடம் கொஞ்சம் கேளுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsThoothukudi Business Directory