» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் பாமக: இறுதி ஒப்பந்தம் கையெழுத்தானது!!

செவ்வாய் 19, பிப்ரவரி 2019 11:55:47 AM (IST)மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் பாமக இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. கடந்த வியாழக்கிழமை சென்னை வந்த மத்திய ரயில்வே துறை அமைச்சரும் பாஜகவின் தமிழகப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 1 மணி வரை தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து, இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறி வந்தனர். இதே கருத்தை துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் கூறினார். அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கூட்டணி குறித்து இறுதி செய்வதற்காக, சென்னை நந்தனத்தில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் வந்தனர். இதையடுத்து, சிறிது நேரத்தில் பாமக தலைவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் வந்தனர்.  அவர்களை முதல்வர் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர், அவர்களுடன் அதிமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தி, இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. 

ஒப்பந்தம் குறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது,  2019ம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் இணைந்துள்ள பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளும், 1 மாநிலங்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது காலியாக இருக்கும் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு தெரிவிக்கும் என்பதையும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பாமகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 7 தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். மேலும், இது வெற்றிக் கூட்டணி, மகாக் கூட்டணி, மக்கள் நலக் கூட்டணி  என்றும், புதுச்சேரி உட்பட 40 மக்களவைத் தொகுதிகளிலும் இந்த மகாக் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அறிவித்தார்.


மக்கள் கருத்து

நிஹாFeb 21, 2019 - 11:16:48 AM | Posted IP 162.1*****

அன்புமணி மீதான வழக்கை வைத்து மிரட்டியிருப்பார்கள்.

கேட்ச்Feb 19, 2019 - 05:12:12 PM | Posted IP 162.1*****

அதிகம் விமர்சித்து அடிமையாகிப்போனார்

பாலாFeb 19, 2019 - 03:29:29 PM | Posted IP 162.1*****

மதுவிலக்கு கொள்கையுடைய பாமக மதுவால் பிழைப்பு நடத்தும் அதிமுகவுடன் கூட்டணி.... மக்களை முட்டாள்கள் என நினைக்க வேண்டாம்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory