» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் மிரட்டி அச்சுறுத்தி ஒரு கூட்டணி உருவாகிறது : மு.க.ஸ்டாலின் பேச்சு

திங்கள் 18, பிப்ரவரி 2019 8:34:49 AM (IST)

"எங்களோடு கூட்டணி வைக்கவில்லை என்று சொன்னால், வருமான வரித்துறை ரெய்டு நடத்துவோம் என மிரட்டி ஒரு கூட்டணி உருவாகிறது" என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சியில், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: குடும்பங்கள் ஒரு கூட்டாக கூட்டணியாக இருந்திட வேண்டும். கூட்டுக் குடும்பத்தால் எந்த நிலையிலும் வெற்றி பெற முடியும். அதேபோல் தேர்தல் நேரத்தில் அரசியல் ரீதியாக கூட்டணி ஏற்படுகிறது. இதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

ஆனால் அந்த கூட்டணி முறையாக ஏற்பட்டால் அது தவறல்ல, பலவந்தப்படுத்தி கட்டாயப்படுத்தி ஏற்படுத்தக்கூடிய கூட்டணி இப்பொழுது தமிழ்நாட்டில் உருவாகியிருக்கின்றது. உருவாகப் போகின்றது. அதை நீங்கள் காணப்போகின்றீர்கள். எப்படி கட்டாயப்படுத்தப்படுகின்றது என்று சொன்னால், மிரட்டி, அச்சுறுத்தி, எங்களோடு நீங்கள் கூட்டணி வைக்கவில்லை என்று சொன்னால் குட்கா விவகாரத்தை நாங்கள் பிரச்சினை ஆக்குவோம். எங்களோடு நீங்கள் கூட்டணி வைக்கவில்லை என்று சொன்னால், 89 கோடி வருமான வரித்துறை ரெய்டு செய்து அதன் ரெக்கார்டு எங்கள் கையில் இருக்கின்றது என்று மிரட்டி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் ரீதியாக தேர்தலுக்காக நடத்துகின்ற கூட்டணி அது ஒரு பக்கம்.

18 எம்.எல்.ஏ.க்கள் பதவிகளை ஏன் பறித்தார்கள்? அப்படி பறித்தால் தான் இந்த ஆட்சி நிலைக்கும். அதுமட்டுமல்ல இன்னொரு 11 எம்.எல்.ஏ.க்கள் கதி என்னாகப் போகின்றது? மார்ச் முதல் வாரத்தில் தீர்ப்பு வரப்போகின்றது. உச்ச நீதிமன்றத்திலிருந்து தீர்ப்பு வரப்போகின்றது. என்ன வழக்கு? ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கக்கூடாது இந்த ஆட்சி கவிழ வேண்டும் என்று ஓட்டு போட்டது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அவர்களுடைய பதவி இன்னும் இருக்கின்றது.

ஆதரித்து ஓட்டு போட்டவர்களுக்கு பதவி போகிறது என்றால், எதிர்த்து ஓட்டு போட்டவர்களுக்கு பதவி இருக்குமா? இதற்கு சட்டம் படித்து தான் இதைச் சொல்லனுமா? நிச்சயமாக உறுதியாக வருகின்ற மார்ச் முதல் வாரத்தில் இந்த 11 பேர் பதவியும் பறிக்கப்படப் போகின்ற தீர்ப்புத்தான் வரப்போகின்றது. அப்படி வருகின்ற போது இந்த ஆட்சி நிச்சயமாக இருக்க வாய்ப்பே கிடையாது. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி நாம் காத்திருக்கின்றோம். விரைவில் அது வரப்போகின்றது, அதை தள்ளிவைக்க வாய்ப்பே கிடையாது.

ஏப்ரல், மே மாதத்திற்குள் இந்தியா முழுவதும் நடாளுமன்றத் தேர்தல் முழுமையாக முடிவுற்று மத்தியில் ஒரு புதிய ஆட்சி உருவாகப் போகிறது. தி.மு.க. சுட்டிக்காட்டக்கூடிய பிரதமர் தலைமையில் அமையக்கூடிய ஒரு ஆட்சி மத்தியில் அமையவிருக்கின்றது. அதில் மாற்றம் கிடையாது. ஆகவே தான். நாடாளுமன்றத் தேர்தல் எதிர்நோக்கி காத்திருக்கின்றோம். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து

சாமிFeb 19, 2019 - 06:34:52 PM | Posted IP 172.6*****

ஆமாம் - மேல கூட்டணி பேச்சுவார்த்தை - கீழே ரெய்டு - அது நினைவு வந்து இருக்கு போல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory