» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

எனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக கூறுபவர்கள் மெகா கூட்டணி அமைப்பது ஏன்? மோடி கேள்வி

திங்கள் 11, பிப்ரவரி 2019 10:16:11 AM (IST)

எனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக கூறுபவர்கள் எனக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது ஏன்? எதிர்க்கட்சிகளுக்கு என்று பிரதமர் மோடி,  கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி நேற்று திருப்பூர் வந்தார். அங்குள்ள பெருமாநல்லூரில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அவர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு அதே பகுதியில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 8 நாடாளுமன்ற தொகுதிகளின் பாரதீய ஜனதா தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கு கொண்ட பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில் கூறியதாவது: காவிரி, நொய்யல், அமராவதி, பவானி ஆகிய புண்ணிய நதிகள் ஓடும் இந்த பூமியில் வாழும் தமிழ் சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த திருப்பூர் மண்ணுக்கு நான் தலைவணங்குகிறேன். ஏனென்றால் இது துணிச்சல் மிக்க மண். தைரியத்திற்கான மண். திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை ஆகியோரின் துணிச்சலும், வீரமும் இந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை வழங்கிக்கொண்டு இருக்கிறது. உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் வாழ்கின்ற மண். இப்போது நான் பல முன்னேற்ற திட்டங்களை தொடங்கி வைத்து விட்டு வந்து இருக்கிறேன். 

இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையை சுலபமாக்கும் பணியிலே பாரதீய ஜனதா அரசு ஈடுபட்டு உள்ளது. தற்போதைய மத்திய அரசு செயல்படும் விதம் முந்தைய அரசாங்கத்தின் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. முந்தைய காங்கிரஸ் அரசு, இந்த நாட்டின் பாதுகாப்பில் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை. நாட்டின் பாதுகாப்பு துறையை நவீனப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை பாரதீய ஜனதா அரசு எடுத்து வருகிறது. ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசு புரோக்கர்களை வைத்து, அவர்களுடைய நலனுக்காகவே செயல்பட்டு வந்தது. கடலில் இருந்து ஆகாயம் வரை எல்லா துறைகளிலும் ஊழல் செய்தார்கள். இன்று ஊழல் வழக்கில் கைது செய்யப்படுகிற இடைத்தரகர்கள் அனைவரும் யாரோ ஒரு தலைவரோடு தொடர்புடையவராக இருந்திருக்கிறார்கள்.

நாம் நம்முடைய ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நாட்டில் புதிய மேற்கொள்ளப்பட இருக்கும் 2 ராணுவ தளவாட வழித்தடங்களில் ஒன்று தமிழகத்தில் அமைகிறது. இதன் மூலம் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக நம்முடைய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வந்தனர். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறது.

ஆனால் ராணுவத்தை இழிவுபடுத்துவதற்காக எதிர்க்கட்சியினர் மிகமோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர், நமது ராணுவம் புரட்சி செய்ய முயற்சித்ததாக ஒரு கதையை கட்டி இருக்கிறார். இந்திய ராணுவம் ஒருபோதும் அப்படிப்பட்ட செயலில் ஈடுபடாது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடுத்தர மக்களை பற்றி கவலைப்படவில்லை. அப்போது மந்திரியாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மறுவாக்கு எண்ணிக்கை மந்திரி (ப.சிதம்பரத்தை பற்றி இப்படி மறைமுகமாக குறிப்பிட்டார்) நடுத்தர மக்களை பற்றி கவலைப்படவில்லை. அவர் யார் என உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இந்த உலகத்தில் இருக்கிற அறிவு முழுவதும் அவரிடம் மாத்திரமே இருக்கிறது என்று நினைக்கிறார். 

"நடுத்தர மக்கள் விலைவாசி உயர்வு பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்.? அவர்கள்தான் விலை உயர்ந்த ஐஸ்கிரீமையும், மினரல் வாட்டரையும் வாங்குகிறார்களே” என்று ஆணவமாக அவர் பேசினார். அந்த மறுவாக்கு எண்ணிக்கை மந்திரிக்கு சொல்கிறேன். நடுத்தர வர்க்கத்தினர் காங்கிரஸ் கட்சியினரின் கேளிக்கை பேச்சை கேட்க தயாராக இல்லை. அதனால்தான் உங்களை தோற்கடித்து இருக்கிறார்கள். அவர்கள் தற்போது ஜாமீன் வாங்குவதில் இருக்கிறார்கள். நம்மை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் அவர்கள் தற்போது தாங்கள் கொள்ளையடித்த பணத்துக்கு கணக்கு காட்டும் நிலைக்கு வந்து உள்ளனர். இதுதான் இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகும். 

நீங்கள் மோடியை வசை பாடுகிற காரணத்தால் தொலைக்காட்சி பெட்டியில் வேண்டுமானால் இடம் கிடைக்கும். ஆனால் தேர்தலில் உங்களுக்கு தோல்விதான் கிடைக்கும். மத்தியில் மக்கள் ஒரு ஆட்சியை அமர்த்தி உள்ளனர். அந்த ஆட்சி ஊழலுக்கும், தவறான செயல்களுக்கும் பூட்டு போட்டு இருக்கிறது. இதுமாதிரியான ஆட்சி தான் வேண்டும் என்று காமராஜர் விரும்பினார். ஊழலில் எள் முனை அளவு கூட பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்ற ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள். இன்று போலி கம்பெனிகள் மூடப்பட்டு உள்ளன. போலி பயனாளிகள் முடக்கப்பட்டு உள்ளனர். அதிகாரவர்க்கத்தை சுற்றி வந்தவர்கள் முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

நமது எதிர்க்கட்சியினர் மிகவும் வினோதமானவர்கள். மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது என்று அவர்கள் சொல்கிறார்கள். மோடி அரசு ஒன்றுமே செய்யவில்லை என்றும், மோசமான அரசு என்றும் வசை பாடுகிறார்கள். அப்படி என்றால் நீங்கள் எதற்காக மெகா கூட்டணி அமைக்க முயற்சி செய்கிறீர்கள்? மோடியை தோற்கடிக்க வேண்டுமென்றால் உங்கள் செயல் திட்டம் என்ன? உங்கள் கொள்கைகள் என்ன? எதிர்க்கட்சிகளின் ஒரே நோக்கம் மோடிக்கு எதிராக அவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான். எதிர்க்கட்சிகளின் கூட்டணி கலப்படமானது. 

தமிழக மக்கள், நாட்டு மக்கள் புத்திசாலிகள். அவர்கள் இவர்களின் விளையாட்டுகளை பார்த்து உள்ளனர். இந்த கலப்பட கூட்டணியை மக்கள் நிச்சயம் தூக்கி எறிவார்கள். இது பணக்காரர்கள் சேர்ந்திருக்கும் குழுமம். அவர்களின் ஒரே குறிக்கோள் குடும்ப அரசியல் தான். வாரிசு அரசியலை கொண்டு வரும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள். எதிர்க்கட்சியினர் விவசாயிகள், இளைஞர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சிகளின் விவசாய கடன் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு எந்த பலனும் ஏற்படாது. மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளின் நலன் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அதன்படி 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். நாம் ஒரு திட்டத்தை அறிவித்தால் எதிர்க்கட்சிகள் ஒரு திட்டத்தை அறிவித்து உள்ளனர். விவசாயிகள் வளமாக இருந்தால் இவர்களால் விவசாயிகளை தவறாக வழி நடத்த முடியாது. அதனால் எதிர்க்கட்சியினர் அதிர்ச்சி அடைந்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியினர் அறிவித்துள்ள திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவாகிறது. ஆனால் பா.ஜனதா அரசு அறிவித்த திட்டத்தின் படி ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.7½ லட்சம் கோடி கிடைக்கும். மீனவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.

அனைவருக்கும் சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதனால்தான் பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏற்கனவே பட்டியலில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் எள் முனையளவு கூட பாதிப்பு ஏற்படாது. நம்மை பொறுத்தவரை சமூக நீதி என்பது கணக்கு அல்ல. எதிர்க்கட்சியினர் இது தொடர்பாக பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியின்போது தாழ்த்தப்பட்ட, மலைசாதியினருக்கான பதவி உயர்வு இட ஒதுக்கீடு நீக்கப்பட்டது. ஆனால் வாஜ்பாய் அரசு தான் அதை மீண்டும் கொண்டு வந்தது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.அவர் ஆங்கிலத்திலும், இந்தியிலும் பேசியதை, பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்து கூறினார்.


மக்கள் கருத்து

முருகன்Feb 12, 2019 - 05:27:40 PM | Posted IP 141.1*****

சிங்கம் எப்போதுமே தனியாகத்தான் வரும் என்பது பழமொழி மட்டும் அல்ல உண்மை.வீரமும் நேர்மையும் கூட்டணிகள் மீது நம்பிக்கை வைக்காது .ஊழல் கூட்டணி உதறல் கூட்டணி

ராமநாதபூபதிFeb 11, 2019 - 02:09:01 PM | Posted IP 141.1*****

ஊருக்குள் புகுந்த ஒரு மிருகத்தை விரட்ட தனிஆளாய் போராடுவதை விட கும்பலாக சேர்ந்து விரட்டினால் எளிதாக விரட்டிவிடலாம் என்பது கிராமத்து சொல்வழக்கம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes
Anbu Communications
Thoothukudi Business Directory