» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மக்களை மேலும் சுரண்டி பணம் பறிக்க மத்திய அரசு துடிப்பது சரியல்ல: ராமதாஸ் காட்டம்

திங்கள் 10, செப்டம்பர் 2018 5:53:35 PM (IST)

எரிபொருட்கள் மீதான வரிகள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.8 லட்சம் கோடி கூடுதல் வரி வருவாயும், சுமார் 12 லட்சம் கோடி மொத்த வரி வருவாயும் கிடைத்துள்ள நிலையில், மக்களை மேலும் சுரண்டி பணம் பறிக்க மத்திய அரசு துடிப்பது சரியல்ல. 

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து ரூ.83.91 ஆகவும், டீசல் விலை 23 காசுகள் அதிகரித்து ரூ.76.98 ஆகவும் உயர்ந்துள்ளன. எரிபொருள் விலை உயர்வால் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலைகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த 26 நாட்களில் 22 முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரூ.80.14 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.77 உயர்ந்து ரூ.83.91 ஆகவும், டீசல் விலை ரூ.72.59லிருந்து ரூ.4.39 உயர்ந்து ரூ.76.98 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி முதல் இன்று வரையிலான 40 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.4.71, டீசல் விலை ரூ.5.44 என்ற அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நாளிலிருந்து இன்று வரை ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 18.63 ரூபாயும், டீசல் விலை 20.10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இந்த அளவுக்கு விலை உயர்த்தப்பட்டதில்லை.

வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அப்பாவி மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விலை உயர்வின் அடுக்கடுக்கான விளைவுகளால் அத்தியாவசியப் பொருட்கள் விலையும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளன. இதனால் மக்கள் வாழ வழி தெரியாமல் தவிக்கின்றனர். இந்தக் கொடுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டுமானால், எரிபொருள்கள் மீதான கலால் வரியை மத்திய அரசும், மதிப்புக் கூட்டு வரியை மாநில அரசும் குறைக்க வேண்டும். ஆனால், இரு அரசுகளும் வரியைக் குறைக்க மறுப்பது மக்களால் மன்னிக்க முடியாத மோசடி ஆகும்.

2014 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 2016 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பயன்களை மக்களுக்கு அளிக்க மத்திய அரசு மறுத்து விட்டது. மாறாக, பெட்ரோல் மீதான கலால் வரியை 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி அதன் பயன்களை மத்திய அரசு அனுபவித்தது.

கச்சா எண்ணெய் வீழ்ச்சிக்கு இணையாக எரிபொருள் விலையை குறைக்காமல், கலால் வரியை உயர்த்துவது குறித்து டெல்லியில் கடந்த 17.12.2015 அன்று செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளை மத்திய அரசு ஒரு கட்டத்தில் குறைக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, அதன் சுமை மக்கள் மீது சுமத்தப்படும் போது இதை மத்திய அரசு செய்யும். எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பது மத்திய அரசின் கடமை ஆகும். அந்தக் கடமையை மத்திய அரசு செய்யும் என்று கூறினார்.

தர்மேந்திர பிரதான் இவ்வாறு கூறியதற்கு பிறகும் பல முறை கலால் வரி உயர்த்தப்பட்டது. அத்துடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்ததால் எரிபொருள் விலை விண்ணைத் தொட்டுள்ளது. 2015 ஆகஸ்ட் 15 ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.20.42, அதாவது 32% அதிகரித்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.30.90, அதாவது 67 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவை நினைத்துப் பார்க்க முடியாத விலை உயர்வு ஆகும். இந்த உயர்வுக்குப் பிறகும் கலால் வரியை உயர்த்த மத்திய அரசுக்கு மனமில்லையென்றால் எப்போது தான் வரியைக் குறைக்கும்? பெட்ரோல், டீசல் விலை 150 ரூபாயை எட்டிய பிறகு குறைக்கலாம் எனக் காத்திருக்கிறதா? மக்கள் மீதான சுமையைக் குறைப்போம் என்று கூறிய அரசு அதை நிறைவேற்றாதது மோசடி அல்லவா?

2014, 2015 ஆகிய ஆண்டுகளில் கலால் வரி உயர்த்தப்பட்டதன் மூலமாக மட்டும் மத்திய அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தது. அதையும் சேர்த்து எரிபொருட்கள் மீதான வரிகள் மூலம் மட்டும் ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இதனால் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.8 லட்சம் கோடி கூடுதல் வரி வருவாயும், சுமார் 12 லட்சம் கோடி மொத்த வரி வருவாயும் கிடைத்துள்ள நிலையில், மக்களை மேலும் சுரண்டி பணம் பறிக்க மத்திய அரசு துடிப்பது சரியல்ல. ஏற்கெனவே அளித்த வாக்குறுதியை மதித்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து எரிபொருட்களின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals


New Shape Tailors


Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory