» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஆழம் பார்க்க எடுத்து வைத்த முதல் அடியிலேயே சறுக்கல்: ரஜினி மீது திமுக கடும் விமர்சனம்

ஞாயிறு 3, ஜூன் 2018 8:53:21 AM (IST)

அரசியலில் ஆழம் பார்க்க எடுத்து வைத்த முதல் அடியிலேயே சறுக்கி விழுந்துள்ளார் என ரஜினிகாந்த் பற்றி தி.மு.க. விமர்சித்துள்ளது.

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் ரஜினிகாந்த் பற்றி காட்டமாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இவைதான் ஆன்மிக அரசியலா? என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசியல் களத்தில் முழு மூச்சாக இறங்கும் முன் ரஜினிகாந்த் ஆழம் பார்க்க எடுத்து வைத்த முதல் அடியிலேயே சறுக்கி விழுந்துள்ளார். அவரது தூத்துக்குடி விஜயம் அதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி பின்னர் விமான நிலையத்தில் நிருபர்கள் மத்தியிலே அவர் ஆத்திரத்தில் வெடித்தது, இவை எல்லாமே அவரது நிலைகுலைந்த தன்மையை வெளிக்காட்டுவதாகவே இருந்தது.

ஆன்மிக அரசியல் நடத்தப்போவதாக அறிவித்த அவரது ‘ஆன்மிகம்’ கேள்விக்குறியாகி விட்டது. யாரோ ஒருவர் இயக்க, அதன்படி இயங்கி வெற்றி பெறுவது சினிமாவில் சாத்தியமாகலாம். ஆனால் அரசியலில் அது இயலாத ஒன்று என்பதை அவரது தூத்துக்குடி விஜயமும் அதன் விளைவுகளும் அவருக்குத் தெளிவாக்கியிருக்கும் என நம்புகிறோம். பத்திரிகையாளர் சந்திப்பின்போது தன் நிலை மறந்து பதற்றத்தோடு வெடித்துவிட்டு, அதற்கு பலத்த எதிர்ப்பு பல திக்குகளிலிருந்து கிளம்பிய பிறகு வருத்தம் தெரிவித்த ரஜினி, தன் கருத்துக்கு எதிராக மறுப்புத் தெரிவிக்கும் வகையில், மறுநாள் வருத்தம் தெரிவித்துள்ளார்.

‘நான் ஒரு முறை சொன்னால் அது நூறு முறை சொன்ன மாதிரி’ என்று திரைப்படங்களில் ‘பஞ்ச்’ டயலாக் பேசிய ரஜினிதான், சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாகி விடும் எனக் கருத்து கூறியுள்ளார் ரஜினி. அப்படிக் கேள்வி எழுப்பியிருப்பது எந்த ரஜினி தெரியுமா? விரைவில் வர இருக்கும் தனது திரைப்படமான ‘காலா’வில் ‘அனைத்துக்கும் போராடுவோம். புரட்சி உருவாக்கப் போராடுவோம்...எனப்பாடி நடித்துவிட்டு நிழலில் ஒன்று, நிஜத்தில் வேறு ஒன்று எனச்செயல்படுவதுதான் ஆன்மிக அரசியலா? ரஜினி தெளிவாக்க வேண்டும்.

போராட்டத்துக்கு எதிராக விமர்சனங்களை வைத்ததே, அவர் யாராலோ ஏவப்பட்ட அம்பாகச் செயல்படுகிறார் என்பதைத் தெளிவாக்கவில்லையா?. இதனைத்தான் தெளிவாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தி உள்ளார். ரஜினியின் குரல் அல்ல, அது வேறு யாருடைய குரலாகவோ தெரிகிறது என்று. அரசியல் சூட்டின் வேகத்தை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அனுபவித்து அடக்கி வாசித்த ரஜினி அவர் அன்று நேரிடையான அரசியல்வாதி அல்ல. ஆனால் இன்று யாருடைய அச்சறுத்தலுக்கோ பயந்து அரசியல் களத்தில் குதிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

எல்லோருக்கும் நல்ல கதாநாயகனாக விளங்கியவர், இன்று பலருக்கும் எதிராக, வில்லனாக விமர்சிக்கப்படுகிறார். அரசியல் உமிழும் வெப்பங்களைத் தாங்கும் பக்குவத்தை ஏற்றிட உடல் உரம் மட்டுமின்றி, உள்ள உரமும் தேவை. ஆன்மிக அரசியல் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு அதனை எதிர்கொள்ள எண்ணினால் வெந்து போக நேரிடும் என்பதை ரஜினிகாந்த் உணர வேண்டும். இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் ரஜினிகாந்தை கடுமையாக தாக்கி முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

சாமிJun 3, 2018 - 09:32:59 PM | Posted IP 162.1*****

சறுக்கல்தான் - உங்களுக்கு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Joseph Marketing

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD







Thoothukudi Business Directory