» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

எப்போது வந்தாலும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி: கமல்ஹாசன் அறிவிப்பு

புதன் 25, ஏப்ரல் 2018 10:50:18 AM (IST)

எப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்’ என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாதிரி கிராம சபை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் டாக்டர் கமீலா நாசர், கவிஞர் சினேகன், நடிகர் பரணி மற்றும் உறுப்பினர்களும், கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் பங்கேற்றனர். 

கிராமத்தில் தரையில் அமர்ந்து பஞ்சாயத்து கூட்டம் நடைபெறுவது போன்று இக்கூட்டம் நடந்தது. கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் மக்களின் கருத்துகள் கேட்டு தீர்மானம் நிறைவேற்றுவது போன்று சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்று பேசியதாவது: கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரை தொகை ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 524 கிராமங்கள் இருக்கின்றன. இதை கோடிகள் மூலம் பெருக்கி பாருங்கள், குப்பை தன்னாலே பொறுக்கி காணாமல் போய்விடும். அத்தனை பணம் இருக்கிறது. அதை பயன்படுத்துகிறீர்களா? என்பது தான் கேள்வி. 

நானும் கிராமத்தில் இருந்து வந்தவன் தான். கிராமத்து மக்களை நோக்கி கிராமத்து மக்களே வீசும் கேள்வி என்று வைத்துக்கொள்ளலாம். ஊழல் ஒழிப்பு என்பது ஒரே நாளில் செய்வது அல்ல. முதலில் குறைப்பு, பின்பு தடுப்பு, அதன்பின்னர் தான் ஒழிப்பு. கிராம பஞ்சாயத்து என்பது ஊற்று போன்றது. அதில் நாம் அஜாக்கிரதையால் சாக்கடையை கலக்க விட்டுவிட்டோம். இப்ப அதை முழுவதும் தோண்டி எடுத்து, மறுபடியும் ஊற்று வர வைக்க வேண்டும். இப்போது காவிரி போராட்டம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த கிராம பஞ்சாயத்து நினைத்தால், இவர்கள் குரல்கள் வலுத்தால், பதில் சொல்ல வேண்டிய கடமை நாடாளுமன்றத்துக்கு இருக்கிறது.

கோட்டையும், சட்டசபையும் வருவதற்கு முன்பே கிராம பஞ்சாயத்து சபை நடந்துகொண்டு இருக்கிறது. எனவே கிராமங்கள் தங்களுடைய வேலையை செய்யட்டும். கோட்டை கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும். தொழில் வளர வேண்டும் என்பதில் கிராமங்களுக்கும் ஆசை இருக்கிறது. ஒரு ஆர்வம் இருக்கிறது. ஆனால் உயிரை கொடுத்து அந்த தொழிலை வளர்க வேண்டும் என்ற கடமை எந்த கிராமத்துக்கும் கிடையாது.

கிராமத்தை தத்து எடுக்கும் முயற்சியில் பலர் தோல்வி அடைந்து இருக்கிறார்கள். நாங்கள் 8 கிராமங்களை தத்தெடுக்க பட்டப்பாடு எங்களுக்கு மட்டும் தான் தெரியும். முக்கிய காரணம் கிராமத்தின் அனுமதி இல்லாமல் தத்து எடுக்க முடியாது. கிராமம் எடுப்பார் கைப்புள்ள இல்லை. எனவே மக்கள் நீதி மய்யத்தில் இருப்பவர்கள் கிராமத்தை தத்து எடுப்பதற்காக புறப்பட்டு போய் விடாதீர்கள். அப்புறம் இது பக்தி பஜனைக்கு புறப்படும் கூட்டம் போன்று ஆகிவிடும். மே 1-ம் தேதி நானும் ஒரு கிராமத்துக்கு சென்று கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க போகவேண்டும் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கமல்ஹாசன் அளித்த பேட்டியில் கூறியதாவது: நாங்கள் மக்களுக்கான புதிய சிம்மாசனத்தை வடிவமைத்து கொண்டிருக்கிறோம். நலமாக மக்கள் வாழும் பூமியை தயார் செய்து கொண்டிருக்கிறோம். கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு புரிந்து கொள்ளவேண்டும். உள்ளாட்சிதான் நமது பலம். எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். மக்கள் நீதி மய்யம் ஊழலுக்கு எதிராக களமாடும். பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.

யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும். நாங்கள் புதிய தமிழகத்தை உருவாக்கி வருகிறோம். அப்போது கற்பு தியாகங்கள் செய்யவேண்டிய நிலை ஒருபோதும் வராது. எஸ்.வி.சேகர் தரம் தாழ்ந்து கருத்து தெரிவித்தது கண்டனத்துக்குரியது. இழிவாக யாரையும் பேசக்கூடாது. தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்களை கண்டிக்கவேண்டியது ஊடகங்களின் கடமை. விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான் மாதிரி கிராம சபை கூட்டம் சென்னையில் நடத்தினோம் என்றார்.


மக்கள் கருத்து

MNMமே 12, 2018 - 02:24:25 PM | Posted IP 141.1*****

தலைவா ஜனவரி 36 இல் உள்ளாட்சி தேர்தல்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads
Joseph Marketing

crescentopticals

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory