» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

உச்ச நீதிமன்றத்திடம் தமிழகம் எதிர்பார்ப்பது ஆறுதலை அல்ல... நீதியை : ராமதாஸ் அறிக்கை

வியாழன் 5, ஏப்ரல் 2018 5:55:41 PM (IST)

தமிழகத்தில் நடக்கும் போராட்டம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியதாக நேற்று செய்திகள் வெளியானது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கேள்வி - பதில் வடிவிலான இந்த அறிக்கை: 

கேள்வி: காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் நலன்களை தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும்,  தமிழக மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியிருக்கிறாரே?

பதில்: காவிரிப் பிரச்சினையில் தமிழக நலன் தொடர்பாக  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டும் அக்கறை உண்மை என்றால் அது வரவேற்கத்தக்கது தான். அதிலும் தலைமை நீதிபதி அமர்வில் வேறு வழக்குக்காக ஆஜராகச் சென்ற தமிழக அரசின் வழக்கறிஞரை அழைத்து இவ்வாறு கூறியிருப்பது, காவிரிப் பிரச்னையில் தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை உச்சநீதிமன்றம் கவனித்து வருவதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

காவிரிப் பிரச்சினையை நீதிமன்றம் கவனித்துக் கொள்ளும் என்பதால் தமிழக மக்கள் போராட்டம் நடத்தக்கூடாது என்பது தலைமை நீதிபதியின் வாதம். நல்லது தான். ஆனால், இந்தியாவின் மிக உயர்ந்த நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், ஆணையையும் மத்திய அரசே மதிக்கவில்லை என்பது தான் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிப்பதற்கான முக்கியக் காரணம் ஆகும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இதுவரை செயல்படுத்தாத மத்திய அரசு, அதற்காக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள காரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் அதை எதிர்த்து கர்நாடகத்தில் போராட்டம் வெடிக்கும் என்பது தான். காவிரிப் பிரச்னையில் பாதிக்கப்பட்ட மாநிலமான தமிழகம் போராட்டம் நடத்தக்கூடாது என்று அக்கறையுடன் கூறும் தலைமை நீதிபதி, வரும் 9ஆம் தேதி காவிரி வழக்கு தொடர்பாக தமிழக அரசும், மத்திய அரசும் தாக்கல் செய்துள்ள மனுக்கள் விசாரணைக்கு வரும்போது அதே அக்கறையுடன், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். அதற்கு எதிராக கர்நாடகத்து மக்கள் போராட்டம் நடத்தக்கூடாது. தமிழகத்திற்கு நீதி வழங்குவதை எதிர்க்கக்கூடாது என்று ஆணையிட வேண்டும். அவ்வாறு ஆணையிட்டால் தமிழக மக்கள் மகிழ்ச்சியடைவர்.

காவிரி பிரச்னை தொடர்பாக கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இன்னும் கொஞ்சம் தெளிவாகத் தீர்ப்பளித்திருந்தாலே பல சிக்கல்களை தவிர்த்திருக்கலாம். இந்த விஷயத்தில் காவிரி நடுவர் மன்றம் அளித்தத் தீர்ப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது தான். தமிழகம் தொடர்ந்த வழக்கின் கோரிக்கையும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிட வேண்டும் என்பது தான். அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்,காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறியிருந்தால் மத்திய அரசு தப்பித்திருக்க முடியாது. மாறாக ஸ்கீம் என்று குறிப்பிட்டது தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும்.

மத்திய அரசின் சார்பில் விளக்கம் கோரும் மனு சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது, ஆறு வார கால அவகாசம் முடிந்த பிறகா விளக்கம் கேட்க வருவீர்கள். தீர்ப்பளிக்கப்பட்ட ஓரிரு நாட்களில் விளக்கத்தைக் கேட்டு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வாரியத்தை அமைத்திருக்க வேண்டாமா? என்று கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், உச்சநீதிமன்றம் அதை செய்யவில்லை. இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. வரும் 9-ஆம் தேதி காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாட்களில் அமைக்க நீதிபதிகள் ஆணையிட வேண்டும். அதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டின் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் காட்டிய அக்கறைக்கு நன்றிகள். ஆனால், உச்ச நீதிமன்றத்திடம் தமிழகம் எதிர்பார்ப்பது ஆறுதலை அல்ல... நீதியை! என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ஆப்Apr 5, 2018 - 07:35:18 PM | Posted IP 172.6*****

வளர்ச்சியின் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் நாட்டில் ,விஞ்ஞானம் வளர்ந்த நாட்டில் நீதி மன்றம் தெளிவாக நீதி சொல்லவில்லையா அல்லது சொன்ன நீதியை அரசாங்கம் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லையா.அரசாங்கத்திற்கு நீதி குறித்து சந்தேகம் வந்திருந்தால் மறுநாளே ஆசிரியர் நீதிமன்றத்திடம் தனது சந்தேகத்தை தீர்த்திருக்க வேண்டும்.இவர்களின் கபட நாடகத்தை புரிந்து கொள்ளமுடியாத முட்டாள் மக்கள் நாங்கள் இல்ல.இனியும் எங்களை ஏமாத்தாதீர்கள்.

ஆப்Apr 5, 2018 - 07:28:55 PM | Posted IP 172.6*****

அவங்கள கேட்டு என்ன பிரயோஜனம்.நீதி செத்துடுச்சினு எங்களை நினைக்க வைத்து விடாதீர்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Nalam Pasumaiyagam

Anbu Communications

Black Forest Cakes

Joseph Marketing

New Shape Tailors


Thoothukudi Business Directory