» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் செலவு ரூ.3 கோடியை தாண்டியுள்ளது: ராஜேஷ் லக்கானி பேட்டி

சனி 23, டிசம்பர் 2017 9:01:58 AM (IST)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் செலவு ரூ.3 கோடியை தாண்டியுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்த வன்முறையும் நடக்கவில்லை. அங்கு 4 ராணுவத்தினருக்கான தபால் வாக்குகள் ஆன்லைனில் அனுப்பப்பட்டு இருந்தன. அந்த ஓட்டுகள் செலுத்தப்பட்டுவிட்டதா என்பது வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவரும். வாக்கு எண்ணிக்கை தொடங்கும் 8 மணிக்குள்ளாக அந்த ஓட்டுகள் வந்து சேர்ந்தால் அவை எண்ணப்படும்.

போட்டியிட்ட 59 வேட்பாளர்களும் 3 முறை தங்களது தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவேண்டும். இதற்கு ஒருமாத காலஅவகாசம் தரப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தண்டையார்பேட்டை படேல்நகரில் உள்ள 19–வது வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 377 ஓட்டுகளில் 340 ஓட்டுகள் (90.19 சதவீதம்) பதிவாகியுள்ளன. புதுவண்ணாரப்பேட்டை 130–வது வாக்குச்சாவடியில் குறைந்தபட்சமாக 1,228 வாக்காளர்களில் 740 பேர் (60.20 சதவீதம்) ஓட்டளித்துள்ளனர். அங்கு வாக்குப்பதிவு ஏன் குறைந்தது என்பது பற்றி ஆய்வு செய்யப்படும்.

ஆர்.கே.நகரில் 77.50 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது. இது ஆர்.கே.நகரில் இதுவரை கிடைத்த அதிகபட்ச சதவீதம். மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 ஓட்டுகளில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. ஆண்கள் 83,994 பேரும் (75.74 சதவீதம்), பெண்கள் 92,867 பேரும் (79.22 சதவீதம்), மூன்றாம் பாலினத்தவர் 24 பேரும் வாக்களித்துள்ளனர்.

மாலை 5 மணிக்கு மேல் 84 வாக்குச்சாவடிகளில் டோக்கன் வழங்கி ஓட்டுபோட அனுமதி அளிக்கப்பட்டது. இறுதியாக இரவு 7.43 மணி வரை கொருக்குப்பேட்டை ஓட்டு சாவடியில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. சில வாக்குச்சாவடிகளில் அதிக வாக்காளர்கள் இருப்பதும் தாமதமாக ஒரு காரணம். எனவே 800 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற விகிதத்தில் மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

ஓட்டு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கும். 14 மேஜைகளில் 19 சுற்றுகளில் ஓட்டுகள் எண்ணப்படும். ஓட்டு எண்ணும்போது அந்த எந்திரத்தில் பழுது ஏற்பட்டால், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த விவிபிஏடி எந்திரத்தில் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம்) உள்ள சீட்டுகள் எண்ணப்படும்.

பொதுத்தேர்தலை நடத்தும்போது ஒரு தொகுதிக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை செலவாகிறது. இடைத்தேர்தலுக்கு ரூ.60 லட்சம் வரை செலவாகிறது. ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான செலவு ரூ.3 கோடியை தாண்டிவிட்டது. தேர்தல் பணியில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான செலவு மட்டுமே ரூ.1.30 கோடி.

39–வது வார்டில் வாசுதேவன் என்பவர் 2 முறை ஓட்டு போட்டதற்கான ஆதாரமாக தன்னுடைய 2 கை விரல்களிலும் மை உள்ளதை காட்டியுள்ளார். அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் கைதாகலாம். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 10–ந் தேதி வெளியிடப்படும்.

ரகசியமாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்காளரின் மார்பு வரை மறைப்பு வைக்கப்படுகிறது. வாக்காளர்கள் கை மற்றும் கண் அசைவுகளை வைத்தே தேர்தல் ஏஜெண்டுகள் யாருக்கு வாக்களித்தார்கள் என கணித்துவிடுகின்றனர். எனவே இதை தவிர்ப்பதற்கு ஆளுயர மறைப்புகளை வைக்க ஆலோசிக்கப்படும். இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

crescentopticals



Thoothukudi Business Directory