» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

டாஸ்மாக்கில் குடலை அரிக்கும் அமிலம் விற்பனை: ஆய்வுக்கு உட்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

திங்கள் 23, அக்டோபர் 2017 12:57:06 PM (IST)

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுவகைகளையும் தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: மது அருந்துவது உடலுக்குக் கேடு... அதிலும் டாஸ்மாக் மதுவகைகளை அருந்துவது மிக மிகக் கேடு என்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகளில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அமிலங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட ரம் வகை மதுவை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் அதன் தரத்தை ஆய்வு செய்யக்கோரி உணவுப் பாதுகாப்புத்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார். அத்துறையின் அதிகாரிகள் அந்த மதுப்புட்டியை தஞ்சாவூரில் உள்ள உணவுப் பொருட்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்துள்ளனர். மற்றொருபுறம்  அதே மது வகையை மாநில தடய அறிவியல் துறையும் ஆய்வு செய்திருக்கிறது. இரு ஆய்வு முடிவுகளும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கின்றன. ரம் மதுவில் குறைந்தபட்ச தரம் கூட இல்லை என்பதும், அதில் டார்டாரிக் அமிலம், அசிட்டிக் அமிலம், எத்தில் அசிடேட் ஆகிய வேதிப்பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றால் மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

டார்டாரிக் அமிலமும், அசிட்டிக் அமிலமும் திராட்சை, எலுமிச்சை போன்ற பழங்களில் கூட இருப்பவை தான். ஆனால், இவற்றின் அளவு அதிகமானால் பாதிப்புகள் கடுமையானதாக இருக்கும். டார்டாரிக் அமிலம் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாயுக்கோளாறு, வயிறு மற்றும் குடல் அழற்சி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும். அசிட்டிக் அமிலம் அதிகமானால் குடல் அரிப்பு, நெஞ்சு எரிச்சல், செரிமான அமைப்பு சேதமடைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவது உறுதி என மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி ரத்தத்தில் அமிலத்தின் அளவு அதிகரித்து அதனாலும் பல வகையான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என தெரியவந்துள்ளது.

மதுவின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த உலக நலவாழ்வு நிறுவனம் புற்றுநோய், கல்லீரல் அழற்சி, காசநோய் உள்ளிட்ட 200 வகையான நோய்கள் ஏற்படும் என்று கண்டறிந்துள்ளது. ஆனால், டாஸ்மாக் மது வகைகளை அருந்துவோருக்கு அதைவிட பலமடங்கு அதிக நோய்கள் ஏற்படுவது உறுதியாகியுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் மதுவின் தரத்தை ஆய்வு செய்யவோ, தரமற்ற மதுவகைகளை தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ டாஸ்மாக் நிறுவனமும், உணவுப் பாதுகாப்புத் துறையும் தயாராக இல்லை என்பது தான். ரம் மதுவில் அளவுக்கு அதிகமாக அமிலங்கள் இருந்தது குறித்த விஷயத்தில் கூட உணவுப் பாதுகாப்புத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தரம் குறைந்த மதுவை விற்பனை செய்த கோயம்பேடு மதுக்கடை, நெடுஞ்சாலையோர மதுக்கடைகளுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், மூடப்பட்டு விட்டதாகவும், அதனால் அக்கடை மீது எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று கூறி இப்பிரச்னையை கைவிட்டு விட்டது. உணவுப் பாதுகாப்புத்துறையின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

ஒரு கடையில் விற்பனை செய்யப்பட்ட ரம் வகை மதுவில் அளவுக்கு அதிகமாக அமிலங்களும், வேதிப் பொருட்களும் இருந்தது கண்டறியப்பட்டதற்காக சம்பந்தப்பட்ட மதுக்கடை மீது மட்டும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உணவுப் பாதுகாப்புத்துறையின் புரிதலே தவறானது ஆகும். மதுவில் அளவுக்கு அதிகமாக அமிலங்கள் கலந்திருந்தால் அதற்கு அதை தயாரித்த நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும். அந்த வகையில் சம்பந்தப்பட்ட மது ஆலை மீது நடவடிக்கை எடுக்காமல் உணவுப் பாதுகாப்புத்துறை தட்டிக் கழித்திருப்பதை அனுமதிக்க முடியாது. அதுமட்டுமின்றி, சர்ச்சைக்குரிய ரம் வகை மது ஆய்வுக்கு அனுப்பப்பட்டதால் தான் அதில் அமிலங்களும், நச்சுக்களும் கலந்திருப்பது தெரியவந்தது. மற்ற மது வகைகளிலும் இதே போன்ற நச்சுக்கள் கலந்திருக்க வாயப்புள்ளது. ஆனால், எத்தகைய ஆய்வையும் நடத்தாமல் உணவுப் பாதுகாப்புத்துறை வேடிக்கைப் பார்ப்பது ஏற்கத்தக்கதல்ல.

தமிழகத்திலுள்ள அனைத்து மது ஆலைகளும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தில் பதிவு செய்திருப்பதுடன், உணவுப் பாதுகாப்புத் துறையால் சான்றளிக்கப்பட்டுள்ளன. எனவே, டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் அனைத்தும் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருகின்றன. அதுமட்டுமின்றி, டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவகைகளை தர ஆய்வுக்கு உட்படுத்துமாறு 08.07.2015 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆனால், டாஸ்மாக் மதுக்கடைகள் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலான 14 ஆண்டுகளில் ஒருமுறை கூட மது வகைகளின் தரம் குறைத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படாதது துரதிருஷ்டவசமானது.

உணவுப் பாதுகாப்பு ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள இ.ஆ.ப. அதிகாரி பெ.அமுதா நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது தர ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் தொடர்ந்து மக்களின் உயிரை பறிப்பதை அனுமதிக்கக்கூடாது. உடனடியாக அனைத்து மதுவகைகளையும் தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கெல்லாம் மேலாக இச்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Johnson's Engineers

Universal Tiles Bazar


New Shape Tailors


Nalam Pasumaiyagam

selvam aqua


CSC Computer Education
Thoothukudi Business Directory