» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழகத்திற்கு டி.ஜி.பி. அந்தஸ்துள்ள ஊழல் தடுப்பு கமிஷனரை நியமிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வியாழன் 11, மே 2017 11:18:51 AM (IST)

தமிழகத்திற்கு டி.ஜி.பி. அந்தஸ்தில் ஒருவரை ஊழல் தடுப்பு கமிஷனராக நியமிக்க வேண்டும் என்று கவர்னருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் கூறியிருப்பதாவது: 1964-ம் ஆண்டு ஊழல் தடுப்புக்கான சந்தானம் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்று, மத்திய அரசு ஊழியர்களை கண்காணிக்கும் சுயாதீனமான ஊழல் தடுப்பு கமிஷன் ஒன்றை மத்திய அரசு உருவாக்கியது. மத்திய அரசின் ஊழல் தடுப்பு கமிஷனை முன்மாதிரியாகக் கொண்டு, பல மாநிலங்களில் ஊழல் தடுப்பு கமிஷன்கள் ஏற்படுத்தப்பட்டன.

அ.தி.மு.க. அரசு 2011-ம் ஆண்டு பொறுப்பேற்ற உடன், இரண்டு வார காலத்திற்குள் நடைமுறைகளுக்கு மாறாக பாலகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகு, மாநிலத்தின் மிக முக்கிய பொறுப்பான மாநில ஊழல் தடுப்பு கமிஷன் பொறுப்பு அடுத்தடுத்து வந்த தலைமைச் செயலாளர்களின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. அரசால் கூடுதல் பொறுப்பாக மாற்றி வைக்கப்பட்டது. அன்று முதல், மாநில ஊழல் தடுப்பு கமிஷன் தலைமை இல்லாமலும், அதனுடைய சுயாதீனத்தை இழந்தும் இருந்து வருகிறது.

மாநில ஊழல் தடுப்பு கமிஷன் மிகவும் சீரழிந்த நிலையில் இருக்கிறது. மணல் காண்டிராக்டர் சேகர் ரெட்டி அ.தி.மு.க. அமைச்சர்களுக்கும் சில அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாக அவரது டைரியில் கண்டுபிடித்த வருமானவரித் துறை அதிகாரிகள், அந்த விவரங்களை மாநில அரசுக்கு அனுப்பிய தகவல்கள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் இதனை உறுதிப்படுத்துகிறது.

இதனைத்தொடர்ந்து, உள்துறைச் செயலாளரை, மாநில ஊழல் தடுப்பு கூடுதல் கமிஷனர் பொறுப்பில் நியமித்துள்ள இடைக்கால நடவடிக்கையால் மாநில ஊழல் தடுப்பு கமிஷனுக்கு உள்ள சுயாதீனத்தன்மை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான அக இணையத்தில் கூட வெளியிடாமல் பாதுகாக்கப்படும் மர்மம், இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள தவறான நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

ஊழல் தடுப்பு கமிஷன் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக வினித் நரேன் வழக்கில், சட்டரீதியான அந்தஸ்தை மத்திய ஊழல் தடுப்பு கமிஷனுக்கு வழங்க வேண்டும், என அறிவித்தது. அதேபோல, முன்னாள் மத்திய ஊழல் தடுப்பு கமிஷனர் பி.ஜே.தாமஸ் வழக்கில், சட்டத்தின் ஆட்சியை பரவலாக நிலைநிறுத்த மத்திய ஊழல் தடுப்பு கமிஷன் போன்ற அமைப்புகள் சுதந்திரமாக இயங்கி, பாரபட்சமற்ற முறையிலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், தகுதியானவர்களை அந்த பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மாநில ஊழல் தடுப்பு கமிஷனுக்கும் அவை பொருந்துவதாக அமைந்து, லஞ்ச தடுப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குனரகத்தின் பல்வேறு செயல்பாடுகளில் ஊழலை ஒழிக்க உதவும். மாநில அரசின் பல்வேறு படிநிலைகளிலும் ஊழல் படிந்து வரும் நிலையில், தமிழகத்திற்கென தனியாக ஒரு ஊழல் தடுப்பு கமிஷனர் இல்லை, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகத்துக்கு டி.ஜி.பி. அந்தஸ்தில் இயக்குனர் ஒருவரும் இல்லை என்பதோடு மாநிலத்தில் லோக் அயுக்த அமைப்பும் இல்லை. இப்படி ஊழலுக்கு அமைப்புகள் அத்தனையும் எதிரான இயங்கவிடாமல் திட்டமிட்டு தடுக்கப்பட்டு இருப்பதன் மூலம், மிகப்பெரிய அளவில் ஊழல் பெருகி, தமிழக மக்களின் நலன் மட்டுமல்லாமல், நமது நாட்டின் மிக முக்கியமான மாநிலத்தின் வளர்ச்சியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது.

எனவே, தாங்கள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, மாநில ஊழல் தடுப்பு கமிஷனுக்கு சுதந்திரமாக இயங்கக்கூடிய ஊழல் தடுப்பு கமிஷனர் ஒருவரை பணியமர்த்தவும், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனராக டி.ஜி.பி. அந்தஸ்தில் ஒருவரை பணியமர்த்தும்படி தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் தங்களை கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம், பொதுமக்களின் நலன் சார்ந்து மாநிலத்தில் செயல்படக்கூடிய ஊழல் தடுப்பு அமைப்புகளின் பெருமைக்குரிய அம்சங்கள் மீண்டும் நிலை நிறுத்தப்படும்.  இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

selvam aqua

New Shape Tailors
Universal Tiles Bazar

Johnson's Engineers

CSC Computer Education

Pop Up Here

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory