» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழர்களின் உணர்வுகளை உளவுத்துறையின் மூலம் மத்திய அரசு அறிந்து கொள்ள வேண்டும்: வைகோ

திங்கள் 9, ஜனவரி 2017 5:00:43 PM (IST)

தமிழர்களின் உணர்வுகளை உளவுத்துறையின் மூலம் மத்திய அரசு அறிந்து கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டுத் தடையை நீக்க மத்திய அரசு உடனே செயல்பட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தைத் திங்கள் முதல் நாளைத் தமிழ்க்குலத்தின் பண்பாட்டுத் திருநாளாகப் பன்னெடுங்காலமாகத் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். உணவு தானியங்களை விளைவித்துக் கொடுக்கும் இயற்கைக்கு, மண்ணுக்கு, ஆவினங்களுக்கு, நன்றி செலுத்தும் திருநாளாகப் போற்றி வருகின்றனர். தைப்பொங்கல் திருவிழாவுடன் இணைத்தே மாட்டுப் பொங்கலையும் கொண்டாடி வருகின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தை முதல் நாளையே ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டு காலத்தைக் கணக்கிட வேண்டும் என்று, தமிழ்த் தென்றல் திரு வி.க. உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள், முப்பதுகளிலேயே கோரிக்கை விடுத்தனர். வானம் பொய்யாது, வளம் பிழைப்பு அறியாது, நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது, பத்தினிப் பெண்டிர் வாழ்ந்த நாடாகத் தமிழகம் திகழ்ந்தது. உலகப் பொதுமறையான திருக்குறளின் இரண்டாவது அதிகாரத்திலேயே வான்மழையின் சிறப்பை வள்ளுவர் பத்துக்குறட்பாக்களாகத் தருகின்றார். மக்களுக்கு உணவு வழங்கி வாழ்விப்பவர்கள் உழவர் பெருங்குடியினரே.

ஆனால், வான் பொய்த்ததாலும், அண்டை மாநிலங்கள் தமிழக நதிநீர் வாழ்வாதாரங்களுக்குக் கேடு செய்து வருவதாலும், விவசாயத்திற்குத் தண்ணீர் இன்றி, குடிநீருக்கும் வழி இன்றிக் கோடானுகோடித் தமிழக மக்கள் துன்பத்தின் பிடியில் சிக்கிப் பரிதவிக்கின்றனர். வறண்டு கிடக்கின்ற நிலத்தைப் பார்த்து, கருகிப் போன பயிர்களைக் கண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதயம் வெடித்துத் தற்கொலை செய்துகொண்டு மடிகின்ற செய்திகள், ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி தருகின்ற வகையில் வந்தவண்ணம் உள்ளன.

இந்த ஆண்டு பொங்கல், பெரும்பாலான தமிழர்களுக்குக் கண்ணீர்ப் பொங்கல்தான். எனினும், எவ்வளவுதான் அல்லல்கள் சூழ்ந்தாலும், தொன்மைப் பாரம்பரியமாக நடத்தி வருகின்ற தைப்பொங்கலை, தங்கள் வசதிக்கு ஏற்றவாறு எதிர்காலத்தில் துன்பம் நீங்காதா? என்ற ஏக்கத்தோடு கொண்டாடும் நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் நாகரித்தின் ஒரு பகுதியாக வீரமும், காதலும் போற்றப்பட்டதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்கள் சான்றுகள் தருகின்றன.

கூரிய கொம்புகளோடும் திமிர்ந்த திமிலோடும் தாவி வருகின்ற காளைகளைத் தன் தோள் வலிமையால் அடக்கி ஏறு தழுவுதல் என்பது, தொன்றுதொட்டு வரும் வழக்கம் ஆகும். காளைகளைத் தங்கள் வீட்டுப் பிள்ளைகளாகக் கொஞ்சி மகிழ்வது தமிழர்களின் மரபு ஆகும். காங்கிரஸ் தலைமையில், தி.மு.க. பொறுப்பு வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, காடுகளில் திரிகின்ற கொடிய விலங்குகளின் பட்டியலில், வீடுகளில் பிள்ளைகளைப் போல வளர்க்கின்ற காளை மாடுகளையும் சேர்த்தது பொறுக்க முடியாத கொடுமை அகும்.

மிருகவதையைத் தடுக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு பீட்டா அமைப்பும், மேனகா காந்தி போன்ற பேர்வழிகளும், விவசாயிகளைப் பற்றியோ காளை மாடுகளைப் பற்றியோ அரிச்சுவடி கூடத் தெரியாமல் எதிர்த்ததன் விளைவாக உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது. காளை மாடுகள் வெயிலில் வாடுகின்றன என்று உச்ச நீதிமன்ற நீதிபதி திருவாய் மலர்ந்துள்ளார். நெருப்பாக எரிகின்ற வெயிலில்தான் காளை மாடுகள் கழுத்தில் நுகத்தடியைச் சுமந்து கொண்டு நிலத்தை உழுகின்றன; கடுமையான பார வண்டிகளை இழுத்துச் செல்கின்றன.

மாடுகளுக்குத் துன்பம் இழைக்கக்கூடாது என்று கூறுகின்ற மேதாவிகள், இறைச்சி உணவைத் தவிர்ப்பார்களா? நாட்டில் யாரும் ஆடு மாடு கோழிகளைக் கொல்லல் ஆகாது; எவரும் புலால் உண்ணக்கூடாது என்று உத்தரவிடுவார்களா? ஸ்பெயின் நாட்டில் சீறிப் பாய்ந்து வருகின்ற மாடுகளின் திமில்களில் வீரர்கள் ஈட்டிகளைச் சொருகுவார்கள். அதனால் ரத்தம் கொப்பளிக்கத் துடிக்கத் துடிக்க மாடுகள் இறந்து போகின்றன. நீண்டகாலமாக நடக்கின்ற இந்தப் போட்டிக்குக் கேடலோனியா மாநில அரசு தடை விதித்தது.

எனினும், ஸ்பெயின் நாட்டின் உச்சநீதிமன்றம், பாரம்பரியமான இந்த விளையாட்டைத் தடை செய்ய முடியாது என்று கூறி அந்தத் தடையை ரத்துச் செய்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டில் காளை மாடுகளைப் பிடிக்க முயலும் இளைஞர்களுக்குத்தான் காயம் ஏற்படும்; காளைகள் துள்ளிக்குதித்துக்கொண்டு செல்லும். அந்த மாடுகளுக்கு வீடுகளில் தகுந்த உணவு கொடுப்பதோடு, சிறிய நோய் ஏற்பட்டாலும் தகுந்த வைத்தியம் செய்து விடுவார்கள்.

டிசம்பர் 15 ஆம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடியை புது தில்லியில் நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்குவதற்காக, காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நான் விளக்கிச் சொன்னபோது, என்னுடைய முறையீட்டுக் கடிதத்திலேயே பிரதமர் குறிப்பு எழுதியபோது, எனக்கு மத்திய அரசு மேல் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை
ஏற்பட்டது.

ஆனால், இன்றுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழர்களுடைய பண்பாட்டின் அடையாளங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வோடு, சாதி, மதம் கட்சிகளைக் கடந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் இளம் பெண்களும், நேற்று சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுப் போட்டித் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்த்து எழுந்துள்ளனர்.

எனவே, மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை உளவுத்துறையின் மூலம் மத்திய அரசு அறிந்து கொள்ள வேண்டும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடப்பதற்குரிய நடவடிக்கைகளை ஒருநாள் கூடத் தாமதிக்காமல், மத்திய அரசு உடனே மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், தமிழகத்தில் தடையை மீறி தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் தாமாகவே ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது என்பதை, மத்திய அரசுக்கு மாநில அரசு உணர்த்த வேண்டும்.

இயற்கை ஏற்படுத்திய வறட்சி போன்ற சோதனைகளால் தமிழகம் வேதனையில் ஆழ்ந்துள்ளபோதிலும், தைப்பொங்கல் திருநாளுக்குப் பின்னர் நிலைமைகள் மாறும் என்ற நம்பிக்கையோடு, வருங்காலத்தை எதிர்கொள்வோம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகள் தை முதல் நாள் அன்று, தாங்கள் வசிக்கின்ற பகுதிகளில் புதிய கொடி மரங்களை அமைத்தும், ஏற்கனவே உள்ள கொடி மரங்களுக்குப் புது வண்ணம் பூசியும், கழகக் கொடிகளைப் பட்டொளி வீசிப் பறக்கச் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors

CSC Computer Education

selvam aqua


Black Forest CakesNalam Pasumaiyagam

Panchai Dairy


Universal Tiles Bazar

Johnson's Engineers

Thoothukudi Business Directory