» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழக முதல்வர் பதவியை சிறுமைப்படுத்துவதா? தம்பிதுரைக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்

திங்கள் 2, ஜனவரி 2017 4:24:07 PM (IST)

நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக இருக்கும் மு. தம்பிதுரை தமிழக முதல்வர் பதவியை சிறுமைப்படுத்துகிறார் என்று எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின்  குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று  வெளியிட்ட அறிக்கை: முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் மு.தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைகிறேன்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்தவுடன் இரவோடு இரவாக அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தனியாக பேருந்துகளில் அழைத்துச் சென்று ஓ.பன்னீர் செல்வத்தை தமிழக முதல்வராக தேர்வு செய்தார்கள். அதில் கூட நடைமுறை சிக்கல்கள் பல இருந்தாலும், மாநிலத்தின் நலன் கருதி, மாநில நிர்வாகம் சீர்கெட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல் அமைதி காத்தது.

தமிழக ஆளுநரும் அப்போது நிலவிய அசாதாரண சூழ்நிலையை கருதி, உடனடியாக அதிமுகவின் ஏற்பாட்டிற்கு சம்மதம் தெரிவித்து, நள்ளிரவில் ஓ.பன்னீர் செல்வத்தை தமிழக முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த சூழ்நிலையில், பதவியேற்று பத்து நாட்களுக்குள்ளாகவே, ஓ.பன்னீர்செல்வம் தன் முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பார் என்றும், சசிகலா முதல்வராக வேண்டும் என்றும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை சற்றும் உணராத அதிமுக அமைச்சர்கள் வெளியிட்ட செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இன்னும் சொல்வதென்றால், முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் முதல்முறையாக பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்கச் சென்ற நாளில், இதுபோன்ற பேட்டிகளை அளித்து தமிழக முதல்வர் என்ற பதவியை சிறுமைப்படுத்திய சம்பவங்களை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே தான், தி இந்து ஆங்கில நாளிதழுக்கு நான் கொடுத்த பேட்டியொன்றில், முதல்வர் பன்னீர்செல்வதுக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மெஜாரிட்டி இருக்கிறதா என்று ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டிய அரசியல் சட்ட கடமை இருக்கிறது என்று கூறியிருந்தேன்.

இப்போது, தமிழக முதல்வராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எல்லாம் ஆங்கில புத்தாண்டு தெரிவித்துள்ள நிலையில், திடீரென்று நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக இருக்கும் மு. தம்பிதுரை தமிழக முதல்வர் பதவியை சிறுமைப்படுத்தி, அரசியல் சட்டப்படி அவருக்கு ஆளுநர் செய்து வைத்துள்ள பதவிப் பிரமாணத்தை கொச்சைப்படுத்தி, சசிகலா முதல்வராக வேண்டும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

இது முழுக்க முழுக்க துதி பாடும் செயலாகவும், அத்தகைய செயலுக்கு அரசியல் சட்ட நெறிமுறைகளை காவு கொடுப்பதாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக துணை சபாநாயகர் லெட்டர் பேடை பயன்படுத்தி இப்படியொரு அறிக்கை விட்டிருப்பது மிகவும் வெட்கக்கேடான செயலாகும். ஆகவே, ஆளுநர் உடனடியாக முதல்வருக்கு உள்ள பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அதேநேரத்தில், துணை சபாநாயகர் பதவியைப் பயன்படுத்தி இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

ஒருவேளை கட்சி விசுவாசத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தால் தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, எவ்வளவு அறிக்கைகள் வேண்டுமானாலும் கொடுக்கட்டும். அது அவரது கட்சிப் பணி. ஆனால் அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தவும் தனது துணை சபாநாயகர் பதவியை பயன்படுத்த வேண்டாம் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

தமிழன்Jan 6, 2017 - 06:25:22 PM | Posted IP 115.2*****

குரங்கு கைல பூமாலை கிடைச்ச மாதிரி.. தகுதியே இல்லாதவங்களுக்கு முதல்வர் பதவியை கொடுக்கணும்னு அலைறாய்ங்க இந்த ஜால்ரா கோஷ்டிகள்.. முதல்வர் பதவியை எதோ வார்டு உறுப்பினர் பதவின்னு நினைச்சிட்டு சசிகலாவுக்கு கொடுக்கணும்னு துடிக்குறாய்ங்க... நாட்டை நாசமாகிட்டானுங்க...

சாமிJan 3, 2017 - 12:35:04 PM | Posted IP 103.2*****

வேறு கட்சி விவகாரத்தில் தலையிட இவர் யார்

tamilanJan 3, 2017 - 10:41:28 AM | Posted IP 101.6*****

ஒரு பொறுப்புள்ள எதிர் கட்சி தலைவர் பொறுப்பாக பேசுகிறார் . நீ என்ன லூசா டா சாமீ

சாமிJan 2, 2017 - 04:57:44 PM | Posted IP 59.89*****

ஒங்கிட்ட யார் கேட்டா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals

New Shape Tailors
Thoothukudi Business Directory