» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழ்நாடு முதலமைச்சராக சசிகலா உடனடியாக பொறுப்பேற்க வேண்டும்: தம்பிதுரை அறிக்கை

திங்கள் 2, ஜனவரி 2017 11:28:24 AM (IST)

அதிமுக பொதுச் செயலாளராக சின்னம்மா பொறுப்பேற்றபின்னர் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டு, மன நிம்மதி நிலவுவதாக அதிமுக கொள்கைபரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான மு.தம்பிதுரை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின் கழகத் தொண்டர்கள் மத்தியில் மதிப்பிற்குரிய சின்னம்மா சசிகலா ஆற்றிய உரை அனைவரது உள்ளத்தையும் உருகச் செய்வதாக அமைந்திருக்கிறது. மிகுந்த கண்ணியத்தோடும், கடமை உணர்ச்சியோடும் தனது உரையில் மதிப்பிற்குரிய சசிகலா எடுத்துரைத்த கருத்துக்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சரியான, தகுதியான ஒரு பெருந்தகையின் கையில் ஒப்படைத்து இருக்கிறோம் என்ற மன நிம்மதியை அனைவருக்கும் அளித்திருக்கிறது.

தமிழக மக்களின் உரிமைகள் காப்பாற்றப்படவும், தமிழ் மொழியின் தொன்மையும், சிறப்பும் போற்றப்படவும் எல்லோருக்கும் பயன்தரும் ஒரு ஜனநாயக ஆட்சி முறை உருவாகவும் தந்தை பெரியார் அவர்களை மையமாக வைத்து, பேரறிஞர் அண்ணா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்க அரசியல் பயணம் அவர் அமைத்துத் தந்த பாதையில், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் அடிச்சுவட்டில் இன்னும் பல தலைமுறைகளுக்கு பயணிக்கும் என்ற நம்பிக்கையை எல்லோர் மனதிலும் ஏற்படுத்துவதாக மதிப்பிற்குரிய சின்னம்மா அவர்களின் முதல் பேச்சு அமைந்திருந்தது எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது.

27 ஆண்டுகள் கழகப் பொதுச் செயலாளராக மகத்தான பணிகளை ஆற்றிய புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு, ‘இந்த கழகமும், இதன் கோடானுகோடி தொண்டர்களும் என்ன ஆவார்களோ!’ என்று கலங்கியிருந்த வேளையில், கலங்கரை விளக்கமாய் மதிப்பிற்குரிய சசிகலா திகழ்கிறார்கள். அது போலவே, மிகுந்த நம்பிக்கையோடு தமிழக மக்கள் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு மகத்தான வெற்றியால் விளைந்திட்ட தமிழக அரசு, புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் அமைத்த மக்கள் நலம்பேணும் அரசாகத் தொடருவதற்கு ஏற்ற தலைமை மதிப்பிற்குரிய சின்னம்மா அவர்களது தலைமையே என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

ஆட்சித் தலைமை ஒருவரிடமும், கட்சித் தலைமை இன்னொருவரிடமும் இருப்பது, இந்தியாவில், மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதையும்; ஆட்சித் தலைமையும், கட்சித் தலைமையும் ஒன்றாக, ஒரே இடத்தில், ஒருவரிடமே இருக்கும் போது அந்த அரசு ஒருமித்த சிந்தனையோடும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான செயல் திட்டங்களோடும் இயங்குவதை பார்த்திருக்கிறோம். ஆட்சியும், கட்சியும் வெவ்வேறு தலைமைகளைப் பெற்றதால் பல்வேறு சங்கடங்களுக்கும், செயல்திறன் இல்லாத நிலைக்கும் சில அரசுகள் தள்ளப்பட்டு, காலப்போக்கில் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்திருப்பதையும் வரலாறு நமக்குச் சொல்கிறது.

மதிப்பிற்குரிய சின்னம்மா அவர்களோடு அரசியல் ரீதியாகவும், கழகத் தேர்தல் பணிகள், கழக நிர்வாகம் சம்பந்தப்பட்டும் கடந்த 33 ஆண்டுகளாக தொடர்பில் இருந்த என்னைப் போன்ற பலநூறு பேர்களுக்கு அவருடைய மதி நுட்பமும், அரசியல் சாதுர்யமும் எல்லவற்றுக்கும் மேலான புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் போலவே சிந்தித்து, தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகளுக்கு இடம் தாராமல் முடிவெடுக்கும் ஆற்றலும் நன்கு தெரியும்.

இதற்கு எடுத்துக்காட்டாக மதிப்பிற்குரிய சசிகலா பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்பு ஆற்றிய உரையில் " நம் அம்மா, நமக்கு கற்றுத் தந்திருக்கிற அரசியல் பாடங்களை, அவரது பாதத் தடங்களை, வேதமெனப் பின்பற்றுவோம். அம்மா அவர்கள் நிர்மாணித்த இந்த இயக்கம், மக்களின் இயக்கம். இந்த அரசு மக்களின் அரசு. அவர் காட்டிய வழியில் தான் நம் பாதை. அவர் காட்டிய பாதையில் தான் நமது பயணம்”. என்றும், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக, என்னை ஒருமனதாக தேர்வு செய்திருக்கும் உங்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் ஏற்ப, என் வாழ்வின் எஞ்சிய காலத்தை அர்ப்பணித்து உழைப்பேன். நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், அம்மா வழியில் பின்பற்றுவோம்” என்றும் கூறியிருக்கிறார்.

கட்சித் தலைமையையும், ஆட்சி அதிகாரமும் ஒரே இடத்தில் இருந்தால் தான் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் விட்டுச் சென்ற கழகப் பணிகள் மற்றும் அரசு திட்டங்கள் அவர் எதிர்பார்த்தபடி செய்ய இயலும் என்பது எல்லோருடைய திடமான எண்ணமாகும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை சந்திக்க நாடு இருக்கும் சூழ்நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு மென்மேலும் சிறப்புடன் செயல்பட்டு மக்களின் பேராதரவை, புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும், பெற்றிருந்ததைப் போல தொடர்ந்து பெற்றிடவும் மதிப்பிற்குரிய சசிகலா உடனடியாக தமிழ் நாடு முதலமைச்சராக ஆட்சித் தலைமையை ஏற்க வேண்டும் என்று அன்புடன் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

திறமை, உழைப்பு, மக்கள் மீது அன்பு, கழகத் தொண்டர்கள் மீது அக்கறை என்பவைற்றில் புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் போலவே சிறந்தவராகத் திகழும் மதிப்பிற்குரிய சசிகலா கழகத்தை கட்டிக் காத்து, வழி நடத்தும் பெரும் பணிகளுக்கிடையே தமிழ் நாட்டின் முதலைச்சராகவும் பொறுப்பேற்று கழகத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் மிக, மிக இன்றியமையாதது என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை. என்னைப் போன்ற கழகத் தொண்டர்களின் மனநிலைய ஏற்று, விரைவில் மதிப்பிற்குரிய சசிகலா தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மக்களால் அம்மா; மக்களுக்காகவே அம்மா! மக்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்; மக்களுக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்! - இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape TailorsNalam Pasumaiyagam


Joseph Marketing

Anbu Communications


Black Forest Cakes

CSC Computer EducationThoothukudi Business Directory