» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பிளஸ் 2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும்: கல்வித்துறை அமைச்சர் உறுதி

செவ்வாய் 11, மே 2021 9:07:25 PM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தொடர்ச்சியாக 3-வது நாளாகப் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இன்று ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள் எனப் பல தரப்பினருடன் ஆலோசனை நடத்தினோம்.

இதில் பெரும்பாலானோர் சொன்னது 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான். தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தி அறிவிப்போம். 12 வயதுக்கு உட்பட்ட சுமார் 1,000 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தொற்றுப் பரவல் குறைவது குறித்துச் சுகாதாரத் துறை எப்போது தெரிவிக்கும் என்பதை உற்று நோக்கி வருகிறோம். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்படும்.

12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும். தேர்வுகள் ஒத்தி வைக்கப்படலாமே தவிர ரத்து செய்யப்படும் என்று சொல்ல விரும்பவில்லை. மாணவர்கள், பெற்றோர்கள் யாரும் பயப்படவேண்டாம். தேர்வுத் தேதி அறிவிப்பதற்கு முன்பு உளவியல் ஆலோசனை, தேர்வுக்குத் தயாராகப் போதிய இடைவெளி ஆகியவற்றுக்கு உரிய காலம் ஒதுக்கி, தெளிவான முறையில் அறிவிப்பை வெளியிடுவோம்.

தற்போதைய சூழலில் பிளஸ் 2 தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து மட்டுமே ஆலோசித்து வருகிறோம். பத்தாம் வகுப்பு மதிப்பெண் மதிப்பீடு குறித்து விரைவில் முடிவு செய்து அறிவிப்போம். கடந்த மார்ச் 30ஆம் தேதி வரைதான் ஆசிரியர்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சாதனங்கள் மூலம் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து வந்தனர். பிறகு தேர்தல், பள்ளி விடுமுறை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளால் மாணவர்களின் கற்றல் தள்ளிப் போயுள்ளது. கடந்த ஒரு மாதமாகக் குழந்தைகள் கற்றல் செயல்பாடுகள் எதுவும் இல்லாமல்தான் இருக்கிறார்கள். இனி குழந்தைகளை எப்படிக் கற்றலில் ஈடுபடுத்தலாம் என்பது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.


மக்கள் கருத்து

kumarமே 12, 2021 - 07:19:34 AM | Posted IP 108.1*****

itharku peyar mulu ooradangu alla...paguthi ooradangu...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory