» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பெண்கள் சுய அதிகாரத்துடன் செயல்பட வேண்டும் : மீன்வளக்கல்லுாரி நிகழ்ச்சியில் ஆட்சியர் பேச்சு

செவ்வாய் 11, ஏப்ரல் 2017 8:17:45 PM (IST)தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட நிலைத்த வாழ்வாதாரத்திற்கான மீன்வள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கொம்புத்துறை மீனவ கிராமத்தில் கூட்டு மேலாண்மையின் மூலமாக மீன்வளங்களை வளங்குன்றா வகையில் பயன்படுத்துதல் ஆராய்ச்சி திட்டத்தின் இறுதிக் கூட்டம் கொம்புத் துறை மீனவ கிராமத்தில் இன்று 11 ம் தேதி நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு தமிழக அரசு மீன்வளத் துறை ஆணையர், பீலா ராஜேஷ் வருகை தந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசும் போது மீனவ மக்களிடையே கூட்டு மேலாண்மை மிகவும் முக்கியமானதென்றும், கொம்புத்துறை மீனவர்கள் பின்பற்றி வரும் புதுமையான சந்தைப்படுத்துதல் முறைகளின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறினார். கொம்புத்துறை மக்களால் பின்பற்றப்பட்டு வரும் சந்தைப்படுத்துதல் முறைகள் மற்றும் புதுமையான மீன்பிடிப்பு முறைகள் குறித்து மனநிறைவு அடைந்ததோடு அம்முறைகளை தமிழ்நாட்டின் மற்ற மீனவ கிராமங்களிலும் பின்பற்ற வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். புதுமையான மீன்பிடி சாதனங்கள் மற்றும் மீன்பிடிப்பு முறைகள் குறித்த தகவல்களை தூத்துக்குடி மீன்வளத் தகவல் சேவை மையத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க மீன்வளத்துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார். 

மேலும் பங்குதாரர்கள் கலந்தாய்வு கூட்டத்திலும் கருத்துகளை பதிவு செய்தார். தொடர்ந்து துாத்துக்குடி மாவட்டஆட்சியர் ரவிக்குமார் சிறப்புரை ஆற்றினார். கடல்சார் வளங்களை பாதுகாப்பதின் முக்கியத்துவத்தை பற்றி கூறியதோடு கொம்புதுறை மீனவ கிராமத்திற்கு தேவையான குடிநீர் விநியோகம், சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் சிறந்த முறையில் செய்து தரப்படும் என்றும் உறுதியளித்தார். ஒரு கிராமம் வளர்ச்சிப்பெற வேண்டும் என்றால் அக்கிராம பெண்கள் சுய அதிகாரத்துடன் செயல்பட வேண்டும். அதுபோல இக்கிராமத்தில் உள்ள பெண்களும் குடும்ப சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும்பங்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் நூர்ஹகான் பீவி வாழ்த்துரை வழங்கினார்.

மீன்வளக்கல்லுாரி முதல்வர் சுகுமார் ஆராய்ச்சி திட்டம் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார். மேலும் கொம்புத்துறை மீனவ கிராமத்தில் பின்பற்றப்பட்டு வரும் புதுமையான மற்றும் சுற்றுச்சுழல் பாதிக்காத மீன்பிடிப்பு முறைகளையும், சிறந்த சந்தைப்படுத்துதல் முறைகளையும் பதிவு செய்து அதனை தமிழ்நாட்டில் உள்ள மற்ற மீனவ கிராமங்களிலும் பின்பற்ற வழிவகை செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று கூறினார். இவ்விழாவில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் தயாரிக்கப்பட்ட தமிழக கடல்ஆமைகள் வளங்களும் பாதுகாப்பும் கையேடு மீன்வளத்துறை ஆணையரால் வெளியிடப்பட்டுள்ளது. 

கூட்டு மேலாண்மை குழு உறுப்பினர்கள், மீனவர்கள், மீனவப் பெண்கள், மீன்வளத் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மண்டலம் மீன்வளத் துறை இணை இயக்குநர் ரீனா செல்வி நன்றியுரை ஆற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory