» சினிமா » செய்திகள்

நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்: முதல்வர் ஸ்டாலின், திரையுலகினர் அஞ்சலி

திங்கள் 20, பிப்ரவரி 2023 10:09:20 AM (IST)

பிரபல நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. மயில்சாமியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட திரையுலகினர், ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த நடிகர் மயில்சாமி, சிவராத்திரியை முன்னிட்டு சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி அங்கு நடந்தது. இதில் பங்கேற்ற மயில்சாமி, கோயிலில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில்வீடு திரும்பினார். 3.30 மணி அளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி,நடிகர்கள் ராதாரவி, பாண்டியராஜன், சூரி, ஜெயராம், சித்தார்த், மனோபாலா, கோவை சரளா, செந்தில், எம்.எஸ்.பாஸ்கர், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட திரையுலகினர், ஏராளமான ரசிகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு இன்று காலை நடைபெறுகிறது.

மறைந்த மயில்சாமிக்கு கீதா என்ற மனைவி, யுவன், அன்பு என்ற மகன்கள் உள்ளனர். இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த மயில்சாமி சிறு வயதிலேயே சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்தார். 1984-ம் ஆண்டு ‘தாவணி கனவுகள்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘கன்னிராசி’, ‘என் தங்கச்சி படிச்சவ’, கமலின்‘அபூர்வ சகோதரர்கள்’, ‘வெற்றிவிழா’, ரஜினிகாந்தின் ‘பணக்காரன்’, ‘உழைப்பாளி’ உட்பட பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். மொத்தம் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித், விக்ரம், தனுஷ் உட்பட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் இணைந்து அவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் பெரிதும் வரவேற்பை பெற்றன. ‘பெண்ணின் மனதை தொட்டு’படத்தில் இலங்கை தமிழை, சென்னை வழக்கில் மாற்றிப்பேசுவதும், ‘பாளையத்து அம்மன்’ படத்தில் விவேக்குடன் டான்ஸ் சாமியார் வேடத்தில் வருவதும் ரசிகர்களால் மறக்க முடியாதவை.

மயில்சாமி நடித்து சமீபத்தில் ‘உடன்பால்’ என்ற படம் வெளியானது. கடைசியாக ‘கிளாஸ்மேட்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘காமெடி டைம்’ என்ற சின்னத்திரை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார். மயில்சாமி கடந்த 2021-ம் ஆண்டு விருகம்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். மயில்சாமிக்கு ஏற்கெனவே 2 முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 2-வது அறுவை சிகிச்சை கடந்த நவம்பர் இறுதியில் நடந்தது. சிறந்த மிமிக்ரி கலைஞரான மயில்சாமி, கரோனா காலகட்டத்தில் தனது பகுதியில்பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏராளமான உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

முதல்வர், தலைவர்கள் இரங்கல்: நடிகர் மயில்சாமி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு கட்சித் தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்: பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் படைத்த நடிகர் மயில்சாமி, ‘காமெடி டைம்’ நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் அன்பை பெற்றவர். கருணாநிதியின் பாராட்டை பெற்றவர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் திரையுலக கலைஞர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர். விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகளை செய்துள்ளார். சமூக அக்கறை சார்ந்த கருத்துகளை தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் எடுத்துச் சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தன்னைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு, சமூக எண்ணத்தினால் பல சேவைகளை செய்தவர். நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடத்தில் நீங்கா இடம் பிடித்த மயில்சாமியின் மறைவு திரையுலகுக்கு பேரிழப்பாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என பன்முகங்களை கொண்டவர் மயில்சாமி. பழகுவதற்கு இனிய பண்பாளரான மயில்சாமியை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு இந்த துயரத்தைத் தாங்கிக்கொள்ளும் சக்தியையும் மனவலிமையையும் இறைவன் அளிக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, அவரது புகழை அனைத்து மேடைகளிலும் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தவர். மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த அவருடைய இழப்பு தமிழ்த் திரையுலகுக்கு பேரிழப்பாகும்.

பாமக தலைவர் அன்புமணி: மயில்சாமி சிறந்த மனிதநேயர். திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் தாம் ஈட்டிய வருவாயில் ஒரு பகுதியை ஏழை மக்களுக்கு வழங்கி வந்தவர். கரோனா பெருந்தொற்று காலத்தில் வருவாய் இல்லாமல் தவித்த மக்களுக்கு உணவு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கியவர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory