» சினிமா » செய்திகள்

கேரளாவில் நடிகை மர்ம மரணம்: காதல் கணவர் கைது

சனி 14, மே 2022 5:31:01 PM (IST)

கேரளாவில் நடிகை மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் சகானா (20). மாடல் அழகி. சகானா மாடலிங்கோடு மலையாள படங்களிலும் நடித்து வந்தார். கடந்த ஆண்டு இவர் சஜாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முதலில் இவர்களின் திருமணத்தை ஏற்க மறுத்த சகானாவின் குடும்பத்தினர், பின்னர் அதனை ஏற்று கொண்டனர். அதன்பின்பு அவர்கள் அடிக்கடி சகானா வீட்டுக்கு சென்று வந்தனர்.

சகானா நடிக்க வந்த பின்பு கோழிக்கோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவருடன் தங்கி இருந்தார். நேற்று காலை இவர்களின் வீட்டில் இருந்து அழுகுரல் கேட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றனர். அப்போது சகானா, அவரது கணவரின் மடியில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சகானாவின் உறவினர்களும் தகவல் அறிந்து அங்கு சென்றனர். அவர்கள் சகானாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது கணவர் தான் சகானாவை கொலை செய்திருக்க வேண்டும் எனவும் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே அங்கு வந்த போலீசார் சகானாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சகானாவின் படுக்கை அறையையும் சோதனை செய்தனர். அங்கு கஞ்சா மற்றும் சில போதை பொருட்கள் இருந்தன. அதனை கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதில் சகானாவும், அவரது கணவரும் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். மேலும் அவர்களை வீட்டை காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் ஏற்கனவே கூறியிருந்ததாகவும் கூறினர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனையில் சகானாவின் உடலில் சிறு காயங்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கையை டாக்டர்கள் போலீசாரிடம் அளித்துள்ளனர். அதனை போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். முதற்கட்டமாக அவர்கள் சகானாவின் கணவர் சஜாத்தை கைது செய்தனர். நேற்று அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் இன்று பிற்பகல் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அப்போது சகானாவின் சாவு குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thoothukudi Business Directory