» சினிமா » செய்திகள்

தனுஷின் கர்ணன் படத்தில் சர்ச்சை பாடல் வரிகள் மாற்றம் - இயக்குநர் மாரி செல்வராஜ் அறிவிப்பு

வியாழன் 25, மார்ச் 2021 12:41:02 PM (IST)

கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்கிற பாடல் வரிகள், மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்த நிலையில் கர்ணன் படம் திரையரங்குகளில் ஏப்ரல் 9 அன்று வெளியாகவுள்ளது.  

இந்நிலையிடில் கர்ணன் படத்தில் இடம் பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் பாடலை நீக்கவும், நீக்கும்வரை படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாடல், குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிப்பிடும் பெயரைப் பயன்படுத்தியுள்ளதால் படத்திலிருந்து அப்பாடலை நீக்கவேண்டும், அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக நடிகர் தனுஷ், இயக்குநர் மாரி செல்வராஜ், பாடலாசிரியர், பாடலைப் பாடிய தேவா, தயாரிப்பாளர் தாணு, திரைப்படத் தணிக்கை வாரிய மண்டல அலுவலர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பண்டாரத்தி புராணம் என்கிற பாடல் வரிகள், மஞ்சனத்தி புராணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் அறிக்கை வெளியிட்டுள்ளதாவது:

கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சிப் படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான்.

சொந்த அத்தையாக, அக்காவாக, ஆச்சியாக, பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிப்படுத்தினேன். ஆனால் நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.

தேவதைகள் எந்தப் பெயரில் அழைக்கபட்டாலென்ன... பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிட போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தைப் பாடுவான், கர்ணன் ஆடுவான் . ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும்... காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம் என்று கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory