» சினிமா » செய்திகள்

என் வாழ்க்கையை ஓட வைத்த தியேட்டரை இடிக்கப்போகிறார்கள் - மிஷ்கின் வருத்தம்

வெள்ளி 27, நவம்பர் 2020 4:47:07 PM (IST)



தான் சிறுவயதில் படம் பார்த்த பழைய தியேட்டர் குறித்து இயக்குனர் மிஷ்கின் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கிய மிஷ்கின் தனது சமூக வலைதள பக்கத்தில், தான் சிறுவயதில் படம் பார்த்த பழைய தியேட்டர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில் கூறியிருப்பதாவது: "நான் ஐந்தாவது வயதில் எனது தந்தையுடன் திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி தியேட்டருக்கு சென்று புரூஸ்லி நடித்த எண்டர் தி டிராகன் படத்தை பார்த்தேன். 

சிறுவனாக அந்த தியேட்டரில் பல படங்களை பார்த்து ரசித்து இருக்கிறேன். இப்போது அடுத்த படத்தின் லொகேஷனுக்காக திண்டுக்கல் சென்றபோது அந்த தியேட்டரை பார்க்க சென்றேன். தியேட்டர் உரிமையாளர் இங்கு படம் ஏதும் ஓடவில்லை என்றார். என் வாழ்க்கையை ஓட வைத்த தியேட்டர் என்றேன். தியேட்டரில் ஐந்து வயது சிறுவனாக நுழைந்து ஒரு நாற்காலியில் உட்கார்ந்து திரையை அண்ணாந்து பார்த்தேன். 

சிறுவயதில் பார்த்த தூண்கள் அப்படியே இருந்தன. ஏன் தியேட்டரில் படம் ஓடல என்று கேட்டேன். காலம் மாறிவிட்டது. டி.வி. பைரசி, நெட் வந்ததால் படம் ஓட்டுறத நிப்பாட்டிட்டோம். அடுத்த வாரம் இந்த தியேட்டரை இடிக்கப்போகிறோம் என்றார். நெஞ்சில் வலியுடன் காரில் ஏறி வந்து விட்டேன். அந்த தியேட்டரின் வாசலில் அண்ணாந்து பார்த்தவாறு ஒரு ஐந்து வயது சிறுவன் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறான்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Thoothukudi Business Directory