» சினிமா » செய்திகள்

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மரணம்: முதல்வர் எடியூரப்பா - திரையுலகினர் இரங்கல்

திங்கள் 8, ஜூன் 2020 5:36:55 PM (IST)

பெங்களூருவில், பிரபல கன்னட நடிகர்  சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு முதல்வர் எடியூரப்பா, மற்றும் கன்னட நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. அவருக்கு வயது 39. அவர் பிரபல நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினர் ஆவார். மேலும் சிரஞ்சீவி சர்ஜா தமிழ்-கன்னட படங்களில் நடித்துள்ள நடிகை மேக்னா ராஜின் கணவர் ஆவார். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. 

சிரஞ்சீவி சர்ஜா கன்னடத்தில் 22 படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகராக வலம் வந்த இவர், பெங்களூரு பசவனகுடியில் உள்ள தனது வீட்டில் மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்தார். கரோனா ஊரடங்கால் கடந்த 2 மாதங்களாக வீட்டிலேயே அவர் இருந்து வந்தார். நேற்று மதியம் 12 மணியளவில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. நெஞ்சு வலியும் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் தங்களது குடும்ப டாக்டரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு வரும்படி அறிவுறுத்தி இருக்கிறார்.

அதன்பேரில் சிரஞ்சீவி சர்ஜா உடனடியாக பெங்களூரு ஜெயநகரில் உள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் அவருக்கு திடீரென நெஞ்சு வலி, வலிப்பு மற்றும் மூளையில் பாதிப்பு ஆகியவை ஏற்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்துள்ளார். இதனால் அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர். கன்னட திரையுலகமே சோகத்தில் மூழ்கியது.

இதுபற்றி அறிந்த கன்னட நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட கன்னட திரையுலகினர் ஜெயநகர் அப்பல்லோ மருத்துவமனையில் திரண்டனர். நடிகர்கள் சுதீப், அபிஷேக், சுருஜன் லோகேஷ், ஜக்கேஷ், சிவராஜ்குமார், தர்ஷன், நடிகைகள் சுமலதா அம்பரீஷ் எம்.பி., தாரா, ஹர்சிதா பூனச்சா, சுதாராணி மற்றும் பல நடிகர்-நடிகைகள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நடிகையும், நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவியுமான மேக்னா ராஜை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் சிரஞ்சீவி சர்ஜாவின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினர். முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து, சிரஞ்சீவி சர்ஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education
Thoothukudi Business Directory