» சினிமா » செய்திகள்

பிரபல குணச்சித்திர நடிகர் பாலா சிங் காலமானார்

புதன் 27, நவம்பர் 2019 11:31:24 AM (IST)

புதுப்பேட்டை, என்ஜிகே உள்ளிட்ட பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துப் பிரபலமான பாலா சிங் காலமானார். அவருக்கு வயது 67.

மலையாளத் திரையுலகில் நடிகராக அறிமுகமானாலும், நாசர் இயக்கி நடித்த அவதாரம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் பாலா சிங். பிரபலமான நாடகக் கலைஞரான இவர் தமிழ்த் திரையுலகில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துப் பிரபலமானவர். 

இந்தியன், ராசி, புதுப்பேட்டை, விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே படத்தில் நடித்திருந்தார். அதிலும், இவரது யதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்தது. என்.ஜி.கே இவரது நடிப்பில் வெளியான 100-வது படமாகும். இவரது நடிப்பில் இறுதியாக ஆர்யா நடித்த மகாமுனி படம் வெளியானது. சினிமா மட்டுமன்றி பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்த நிலையில், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு தங்கலீலா என்ற மனைவியும், ஓசின் என்ற மகளும், சிபின் என்ற மகனும் உள்ளனர். இந்த திடீர் மறைவு அவரது குடும்பத்தினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விருகம்பாக்கத்தில் உள்ள பாலா சிங்கின் வீட்டில் திரையுலகினரின் அஞ்சலிக்காக பாலா சிங்கின் உடல் வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலையில் அவரது சொந்த ஊரான களியக்காவிளைக்கு அவரது உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education
Thoothukudi Business Directory