» சினிமா » செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்

செவ்வாய் 6, ஆகஸ்ட் 2019 12:44:12 PM (IST)

பேருந்தில் பெண்களை உரசிய விவகாரம் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் சரவணன் திடீரென வெளியேற்றப்பட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். 

பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.  ஜூலை 27 அன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் - நடிகை மீரா மிதுன் தொடர்புடைய விவாதம் ஒன்று நடைபெற்றது. அப்போது மீராவுக்கு அறிவுரை வழங்கிய கமல், இப்படிப் பார்த்தால் பேருந்துகளில் நெரிசலில் போகவே முடியாது. அங்கு யாரும் வேண்டுமென்று இடிக்கமாட்டார்கள். 

அதேசமயம் பெண்களை உரசுவதற்கென்றே பேருந்தில் பயணிப்பவர்களும் இருக்கிறார்கள் என்றார். அப்போது நடிகரும் போட்டியாளர்களில் ஒருவருமான சரவணன் கையைத் தூக்கினார். உடனே கமல், அத்தகையவர்களை சரவணன் பிடித்து நாலு போடு போட்டிருப்பார் என நினைக்கிறேன் என்றார். ஆனால் சரவணன், நான் கல்லூரியில் படிக்கும்போது அதைச் செய்துள்ளேன் என்றார். கமலும் அரங்கில் இருந்த பார்வையாளர்களும் இதை எதிர்பார்க்கவில்லை. ஐயய்யோ என்றார் கமல். சரவணனின் பேச்சுக்கு பெண்கள் உள்ளிட்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள். அதையும் தாண்டி அவர் புனிதம் ஆயிட்டார் என்றார் கமல். 

பேருந்துகளில் பெண்களை உரசும் செயல்களைக் கல்லூரிக் காலங்களில் தான் செய்துள்ளதாக சொன்ன சரவணனின் பேச்சை கமல் கண்டிக்காதது ஏன்? சரவணனின் பேச்சுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தது ஏன்? இது நடந்தாலும் அந்தச் சம்பவத்தை விஜய் தொலைக்காட்சி அப்படியே ஒளிபரப்பியது ஏன் என்கிற கேள்விகளைச் சமூகவலைத்தளங்களில் பலரும் எழுப்பினார்கள். இதன்பிறகு, இரு நாள்கள் கழித்து அதே நிகழ்ச்சியில் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் நடிகர் சரவணன். பிக் பாஸ் நிகழ்ச்சியும் தொலைக்காட்சியும் பெண்களை இழிவுபடுத்துவதையோ அவமரியாதை செய்வதையோ ஏற்றுக்கொள்ளாது. கமல் சார் முன்பு அப்படிப் பேசியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சரவணனிடம் பிக் பாஸ் நிர்வாகம் கட்டளையிட்டது. 

இதற்கு சரவணன் பதில் அளித்ததாவது: கமல் சார் கேட்டபோது நானும் அதுபோல தவறு செய்துள்ளேன் என்று சொல்வதற்காகக் கையைத் தூக்கினேன். கல்லூரிக் காலங்களில் நிறைய சின்னச் சின்ன தவறுகள் செய்துள்ளேன். யாருமே அதுபோல செய்யாதீர்கள் என்று சொல்வதற்காக முயன்றேன். ஆனால் அந்தச் சூழலில் சொல்லமுடியவில்லை. யாரும் வருத்தப்படும்படியாக நான் எதுவும் சொல்லவில்லை. நான் சிறுவயதில் தவறுதலாகச் செய்தேன். அதுபோல சிறுவயதில் யாரும் தவறு செய்யாதீர்கள். நான் செய்தது தவறு என்பதைச் சொல்வதற்காகத்தான் எல்லோரிடமும் சொல்லி வருகிறேன். என்னைப் போல யாரும் தவறு செய்யாதீர்கள். தவறு செய்தால் தண்டனை உண்டு என்பதை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறேன். யாருக்காவது மனவருத்தம் இருந்தால் தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள். யாருமே அதுபோல செய்யக்கூடாது என்பதற்காகத்தான் கையைத் தூக்கினேன் என்று விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், நடிகர் சரவணனை பிக் பாஸ் அரங்கிலிருந்து வெளியேறுமாறு கட்டளையிடப்பட்டார். நேற்று, பிக் பாஸ் நிர்வாகம் சரவணனை அழைத்துப் பேசியதாவது: மீரா - சேரன் விவகாரத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருந்ததாலும் நேரமின்மை காரணமாகவும் நீங்கள் பேசியதை அந்த நேரத்தில் பரிசீலிக்க முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக நீங்கள் மன்னிப்பு கோரியிருந்த போதிலும் பிக் பாஸ் குழுவினர் இந்தச் சம்பவத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று முடிவு செய்துள்ளார்கள். 

பெண்கள் விஷயத்தில் எந்தவொரு தவறான அணுகுமுறையும் ஏற்றுக்கொள்ளப்படாது. தமிழ்நாட்டிலும் வெளியிலும் கோடிக்கணக்கான குடும்பங்கள் இந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களும் பார்க்காதவர்களுக்கும் முக்கியமாகப் பெண்களுக்கும் இதன் மூலம் தெரியப்படுத்துவது என்னவென்றால் இந்த நிகழ்வு கடந்த காலத்தில் நடந்திருந்த போதிலும் இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதன் காரணமாக நீங்கள் இந்நிகழ்ச்சியில் தொடரக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. சரவணன், நீங்கள் இந்த பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறீர்கள் என்று பிக் பாஸ் நிர்வாகம் சரவணனுக்கு விளக்கமளித்து அவரை உடனடியாக பிக் பாஸ் அரங்கிலிருந்து வெளியேற்றியது.இதனால் நடிகர் சரவணனின் பிக் பாஸ் வாழ்க்கை இத்துடன் முடிவு பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer EducationThoothukudi Business Directory